சிம்புவின் வளர்ச்சியை அன்றே கணித்த வாலி… மாஸ் ஹிட் பாடலின் சுவாரஸ்ய பின்னணி…
சிம்பு சிறுவயதிலேயே தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “காதல் அழிவதில்லை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார் சிம்பு. மேலும் இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக திகழ்ந்தார். அதன் பின் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்த சிம்பு, “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என அறியப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்னும் பல வெற்றித் திரைப்படங்களின் மூலம் மக்களை கவர்ந்த சிம்பு, “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற நிலையில் இருந்து “யங் சூப்பர் ஸ்டார்” ஆக வளர்ந்தார். இவ்வாறு தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த சிம்பு, இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்க்கையில் நடந்த பல தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவில் கோட்டை விட்டார்.
“டப்பிங்கிற்கு வருவதில்லை. ஷூட்டிங்கிற்கும் சரியான நேரத்தில் வருவதில்லை” என சிம்பு மீது பல புகார்கள் எழுந்தது. எனினும் அந்த புகார்களை எல்லாம் உடைக்கும் வகையில் மீண்டும் தனது உடலை மெருகேற்றி “ஈஸ்வரன்”, “மாநாடு” என கம்பேக் கொடுத்தார்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதில் சிம்பு 18 வயது பையனை போல் தனது உடல் எடையை குறைத்திருந்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு யதார்த்த கிராமத்து இளைஞனாக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் சிம்புவின் இந்த அபார வளர்ச்சி குறித்து அன்றே கணித்துள்ளார் கவிஞர் வாலி.
கடந்த 2003 ஆம் ஆண்டு சிம்பு, ரக்சிதா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “தம்”. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு “கலக்குவேன் கலக்குவேன்” என்ற மாஸ் ஆன பாடல் அமைந்திருந்தது. இப்பாடலை இப்போதும் விரும்பி கேட்கும் சிம்பு ரசிகர்கள் பலர் உண்டு.
இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இப்பாடல் பதிவின் போது வாலி “நான் சொன்னா நம்பு, உன் நண்பன்தானே சிம்பு” என்ற வரியை எழுதியிருந்தார். அப்போது சிம்பு வாலியிடம் “இந்த வரி மிகவும் புகழ்வது போல் இருக்கிறதே” என கூறினாராம். அதற்கு வாலி “நீ வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக வளர்ந்துவிடுவாய். அதை குறித்து நான் இப்போதே எழுதியாக வேண்டும். ஆதலால்தான் நான் இந்த வரிகளை எழுதிகிறேன்” என கூறினாராம். இவ்வாறு சிம்புவின் வளர்ச்சியை அன்றே கணித்து எழுதியுள்ளார் வாலி.