திருட்டு முழி!.. தில்லாலங்கடி வேலை!.. ரசிகர்களால் மறக்க முடியாத கல்லாப்பெட்டி சிங்காரம்...
ஒல்லியான தேகம், திருட்டு முழி என்ற அடையாளத்துடன் தமிழ்ப்பட உலகில் 80களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம். இவர் படங்களில் வந்தால் போதும். நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. இவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் குரல். அது கொஞ்சம் ஆடு கத்துவது போல இருக்கும். அதாவது ஆடு மனிதனைப் போல மிமிக்ரி செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
பாக்யராஜ் படங்களைப் பார்த்தால் இவரைப் பார்க்க முடியும். பல படங்களில் நடித்து இருப்பார். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், அந்த 7 நாள்கள்,டார்லிங் டார்லிங் டார்லிங், கன்னி ராசி இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை என பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சட்டம் ஒரு இருட்டறை, எங்க ஊரு பாட்டுக்காரன், கிழக்கு வாசல் என பிற நடிகர்களின் படங்களிலும் காமெடியை அள்ளி வீசி இருக்கிறார் இந்த கல்லாப்பெட்டி சிங்காரம். இவர் சாதாரணமாக கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பேசுவது போல தன்னோட சொந்த நடையில் டயலாக்கைப் பேசி விடுவார். அதுதான் இவரது தனிச்சிறப்பு.
இவர் சிறு வயது முதலே நாடக ஆர்வம் மிக்கவர். சொந்தமாக நாடகக்குழு வைத்து பல நாடகங்களைப் போட்டுள்ளார். பாக்யராஜூடன் இவரது கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப்போனது. அவருக்கும் இவரது வெள்ளந்தியான நடை, உடை, பாவனைகள் பிடித்துப் போய்விட்டது. அதனால் இருவரது காம்பினேஷன் என்றாலே படம் பட்டையைக் கிளப்பியது. கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகப்படுத்தியது பாக்யராஜ் தான். சுவரில்லாத சித்திரங்கள் தான் அவருக்கு முதல் படம்.
காக்கி சட்டை படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் கமலின் அப்பாவாக வருவார். இந்தப் படத்தில் கமல் போலீஸ் ஆகி விட வேண்டும் என்று வைராக்கியத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பார். அவரைத் தயார் படுத்தும் வேலைதான் கல்லாப்பெட்டிக்கு. அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அதே போல உதயகீதம் படத்தைச் சொல்லலாம். கவுண்டமணிக்கு இந்தப் படத்தில் திருடன் கேரக்டர். அவரோட அப்பா கல்லாப்பெட்டி. அப்படின்னா காமெடிக்குச் சொல்லவா வேண்டும்.? அசத்தோ அசத்து என்று அசத்தி இருப்பார். இப்போ பார்த்தாலும் படம் நச்சென்று ரசிக்கும் விதத்தில் இருக்கும்.
கிழக்கு வாசல் படம் தான் இவருக்கு கடைசி படம். தனது 52வது வயதில் உடல் நிலையில் பாதிப்பு வர, காலமானார்.