ஒரு பாடலை எடுக்க 17 நாள்களா? கிளைமாக்ஸ்லயும் புதுடெக்னிக்கைக் கொண்டு வந்த ஏவிஎம்
தமிழ்ப்படங்களில் சண்டைக்காட்சிகள் ரிஸ்க் எடுத்து பல நாள்களாக எடுத்திருப்பதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ஒரு பாடல்காட்சியை அதுவும் 17 நாள்கள் எடுத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான். வாங்க பார்க்கலாம்.
தூங்காதே தம்பி தூங்காதே படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
கமல் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துக் கலக்கினார். போதை ஆசாமியாக வந்து நுனிநாக்கில் இங்கிலீஷ் பேசிக் கலக்குவார். இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ். அதிலும் வருது வருது பாடலை இப்போது கேட்டாலும் நமக்கே ஆடத் தோன்றும். எல்லாப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி தான்.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்ன வென்றால் ஒரே பாடலை 17 நாள்கள் எடுத்திருக்கிறார்கள். வானம் கீழே வந்தால் என்ன என்ற இந்தப் பாடல் படத்தில் பார்க்கும் போது ரொம்ப மாஸாக இருக்கும். எப்படி இப்படி எல்லாம் அந்தக் காலத்திலேயே அதுவும் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் எடுத்தார்கள் என்று நம்மை வியக்க வைத்தது.
அதாவது, கமல் பறப்பது, போல இருக்கும். பூமி சுழல அதன் மேல் நடப்பது என்று மாயஜாலக் காட்சிகள் நம் புருவத்தை உயர்த்த வைக்கும். படத்தில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஹெலிகாப்டர் சேசிங். இது ரொம்பவே பேசப்பட்டது. அதை எப்படி எடுத்தார்கள் என்பது சுவாரசியமான விஷயம். தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்தது கஹீரா என்ற இந்தி படம்.
இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்டது தான் அந்த ஹெலிகாப்டர் சேசிங். படம் ஓடவில்லை. அதனால் அதன் தயாரிப்பாளர்கள் வித்வான் லட்சுமணன், இதயம் பேசுகிறது மணியன் ஆகியோர் நஷ்டம் அடைந்தனர். இதனால் அந்தக் காட்சிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்களா என்று ஏவிஎம் சரவணனிடம் கேட்டார்.
அவரும் பேரம் பேசி 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டார். அந்த புட்டேஜில் கமலை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து சரியாக மேட்ச் செய்துள்ளார்கள். ஒரு படத்தின் கிளைமாக்சை இன்னொரு படத்துக்குக் கொடுத்தது சரித்திரத்திலேயே இதுதான் முதல் முறை.