Cinema History
படத்துக்குப் படம் வித்தியாசம் செய்யும் யுக்தியைக் கையாளும் தீராத் தாகம் கொண்ட உன்னதக் கலைஞன் இவர் தான்..!
இந்திய திரையுலகில் கமல் ஒரு அகராதி என்று சொன்னால் மிகையில்லை. அவரது பல நுணுக்கமான நடிப்புகள் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது. எந்த ஒரு நடிகராக இருந்தாலும் இந்த சீன் எப்படி நடித்தால் நல்லா இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும் போது அவர்களுக்கு கமல் என்ற உன்னத கலைஞன் நினைவுக்கு வந்து விடுவார்.
அடடே கமல் அந்தப் படத்தில் இப்படித் தானே இதே போன்ற காட்சியை நடித்தார். இதே போல் நாமும் செய்தால் என்ன என்று அவர்களுக்குள் ஒரு எண்ணம் தோன்றும். அத்துடன் அவர்களது இயல்பான நடிப்பையும் சேர்த்து விடுவார்கள். ஆனால் எங்கேயோ ஒரு இடத்தில் கமல் போல அழுவார்கள். சிரிப்பார்கள்.
தான் நடிக்கும் ஒரு படத்துக்கு என்ன தேவையோ அதை ஏற்கனவே அறிந்திருப்பார். அல்லது தன்னை ஒரு மாணவனாக மாற்றிக் கொண்டு அந்தக் குறிப்பிட்டக் காட்சிக்காகக் கற்றுக் கொள்வார். ஏதோ பேருக்குக் கற்றுக்கொள்ள மாட்டார்.
அவர் அந்த விஷயத்தைப் பற்றிக் கசடறக் கற்றுத் தெளிவார். அதன்பிறகு தான் நடிக்கவே செய்வார். உதாரணத்திற்கு சலங்கை ஒலி படத்திற்காக பரத நாட்டியத்தை முறைப்படிக் கற்றுத் தேர்ந்தார். அனைவரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர்.
பெண்களாலேயே இவ்வளவு நளினமாகவும் நயமாகவும், வேகமாகவும், லாவகமாகவும் நடனம் ஆடி விட முடியாது. அப்படி ஒரு அற்புதமான நடனத்தை…பின்னிப் பெடலெடுத்து இருப்பார். ஏற்கனவே இவர் ஒரு டான்ஸ் மாஸ்டர். அப்படி என்றால் இவரது நடனத்திற்குக் கேட்கவா வேண்டும்.
பரத நாட்டியத்திற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் சலங்கை ஒலி. அதே போல விஸ்வரூபத்தில் வரும் கதக் நடனமும் அப்படித் தான். இந்தப்படத்திற்காக கதக் கற்றுக் கொள்ளும்போது தன்னை ஒரு மாணவன் நிலையில் இருந்து கொண்டு கதக் நடனத்தைக் கற்றுத் தேர்ந்தார்.
ஒரு நல்ல கலைஞனுக்கு அழகு, ஈகோ பார்க்காமல் எதையும் யாரிடமாவது கற்றுக் கொண்டே இருப்பது தான். அந்தப் பணியை இன்று வரை செவ்வனே செய்கிறார் கமல்.
அதனால் தான் அவரை கலைஞானி என்கின்றனர். இவர் இப்போதும் புதிதாக எதையாவது கற்க வேண்டுமானால் தன்னை ஒரு மாணவனாகவே பாவித்துக் கொண்டு கற்பதைத் திறம்படக் கற்றுக் கொள்வார்.
நெல்லை தமிழை கச்சிதமாகப் பேசுபவர்களில் எம்.எஸ்.பாஸ்கர், நெல்லை சிவா, சுகா அண்ணாச்சி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக இவர்களில் நெல்லை கண்ணனின் தம்பி தான் சுகா அண்ணாச்சி. பாபநாசம் படத்திற்காக நடித்தவர்களில் பெரும்பாலானோருக்கு நெல்லைத் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தவர் இவர் தான்.
கமலுக்கு அவர் எப்படி நெல்லைத் தமிழைக் கற்றுக்கொடுத்தார் என்பதை அவர் தனது வலைதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி பாஷையில் உள்ள ராகம் சிறப்பு வாய்ந்தது. அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநெல்வேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.
‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’ என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.
இது தான் அவரை மற்ற நடிகர்களிடத்தில் இருந்து தனித்துக் காட்டுகிறது.
விருமாண்டி படத்துக்கு காளையை அடக்கும் சீன் எடுக்க வேண்டுமா? அந்த காளையுடன் இரண்டு மாதம் பழகினால் தான் காட்சி சிறப்பாக வரும் என்று அவர் காளையுடன் பழகினார். அதே போல ஆளவந்தான் படத்தில் கமாண்டோவாக நடிக்கணும்னு 15 நாள் அனுமதி பெற்று அந்த அகாடமியில் அவர்களுடனே வாழ்ந்தார் கமல்.
அதனால்தான் அவர் நடித்தக் காட்சிகள் தத்ரூபமாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. ஒரு கமாண்டோ படம் பார்க்கும் போது கமாண்டோவாக நடித்த நடிப்பில் எந்தக் குறையும் தெரிந்துவிடக்கூடாது என்று நினைத்து அதன்படி மெனக்கிட்டு பயிற்சி செய்து நடிப்பார் கமல்.
இன்றும் இவர் சதிலீலாவதி படத்திற்காக கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்ததைப் பலரும் வியப்பாகப் பேசுவர். அது ஏன்னா அந்தப்படத்தில் கமல் கொங்கு தமிழ் பேச வேண்டும். அதற்கு கோவை சரளாவை விட்டால் வேறு ஆள் கிடையாது. அதனால் அவரையே கதாநாயகியாகவும் போட்டார்.
விருமாண்டி படத்திற்கு அபிராமியின் கேரக்டரை ஏன் போட்டார்கள் என்றால் அவர் கம்பம் ஏரியா பெண். படத்தின் கதையும் அந்த மண் சார்ந்தது. அதனால் அவர் அச்சு பிசகாமல் தேனி, கம்பம் பாஷையைப் பேசுவார். கமலுக்கும் அது கைவந்தது.
பொதுவாக திறமை எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிப்பவர் தான் கமல். இமேஜ் பற்றி இவர் இப்போதும் கவலைப்படுவதில்லை. ஒரு இயக்குனராய், திரைக்கதையில் தான் வைக்கும் ஒரு நுணுக்கமான சீன், பார்வையாளர்கள் எப்படியும் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்.
இப்படியே பல படங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் தன்னை ஒரு லெஜண்டாகவே காட்டிக் கொள்ளாமல் தன்னை ஒரு மாணவனாக்கிக் கொண்டு தன்னைத் தானே செதுக்கி மென்மேலும் மெருகேற்றுவார் கமல்.
அந்த வகையில் தன்னைத் தானே செதுக்கும் சிற்பி இவர் என்றால் மிகையில்லை. இன்று வரையிலும் அவர் அப்படித்தான்.