ஒரே ஆண்டில் 5 வெள்ளி விழாப் படங்களைத் தந்த உலகநாயகன் கமல்...! குவிந்தது ரசிகர் வட்டாரம்...!!!
1986ல் விக்ரம் படத்தில் நடிக்கும் வரை அவருக்கு பெரிய அளவில் கமர்ஷியல் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ருத்ரய்யா ஆகியோரின் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இயக்குனர்களுடனே பயணித்து வந்தார் கமல்.
இதன் பிறகு தான் கமர்ஷியல் இயக்குனர்களுடன் கைகோர்த்தார் கமல். ஒரு கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கிசட்டை போன்ற படங்களை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம்.
இந்தியிலும் கூட சாகர், கிராப்தார் என ஹிட் படங்களைத் தந்தார் கமல். இந்தக்காலக் கட்டத்தில் தான் கமல் தானே சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்றும் கமர்ஷியலாக ஹிட் கொடுக்க வேண்டும் என்றும் விரும்பினார்.
படத்தின் கதையை சுஜாதா எழுத, திரைக்கதையை கமலும், சுஜாதாவும் இணைந்து எழுதினர். ஒருவழியாக படத்திற்குக் கதை ரெடியாகிவிட்டது. இப்போது அவர்களுக்குள் ஒரு கேள்வி. படத்தை யார் இயக்குவது? என்பது தான். அப்போது வெற்றிகரமான இயக்குனர் ராஜசேகர். அவரை வைத்து இயக்கிவிடலாம் என முடிவு செய்தார் கமல்.
1985ல் ஒரே ஆண்டில் ரஜினிக்கு படிக்காதவன். கமலுக்கு காக்கி சட்டை என இரு மெகா ஹிட் படங்களைத் தந்தவர் தான் டைரக்டர் ராஜசேகர். அப்போது கமலும் சுஜாதாவும் ஒரு புது டெக்னிக்கலை படத்தில் சேர்க்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி விக்ரம் படத்தின் கதை ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை. இது ஜேம்ஸ்பாண்டு 007 சாயலில் இருக்கும். இதனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
துப்பாக்கி, ஹெலிகாப்டர், ராக்கெட் என ஆக்ஷன் சாகச காட்சிகள் படத்தில் கமலை ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டின. தாண்டவம் படத்தில் விக்ரம், பீஸ்ட் படத்தில் விஜய் ஆகியோர் தற்போது தான் ரா ஏஜெண்டாக நடித்துள்ளனர். ஆனால் 38 ஆண்டுகளுக்கு முன்பே உலகநாயகன் கமல் ரா ஏஜெண்டாக நடித்து அசத்தியுள்ளார். அது தான் விக்ரம் திரைப்படம்.
அக்னிபுத்ரா ஏவுகணை எதிரிகளால் கடத்தப்பட அதை உளவுத்துறையின் மூத்த அதிகாரியான ராவ் முன்னாள் ஏஜெண்டுகளில் ஒருவரான அருண்குமார் விக்ரமை வைத்துக் கண்டுபிடிக்கிறார். இது தான் கதை. ஒரு பக்கம் அவரது மனைவி பரிதாபமாக எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறார். மறுபக்கம் ஏவுகணையைக் கண்டுபிடிக்கும் சவாலை ஏற்கிறார் கமல்.
இந்தப்படத்தில் இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அற்புதம். விக்ரம் டைட்டில் பாடலில் டிஜிட்டல் சவுண்டு, முதன்முதலில் சிலிகான் மூலம் எடுக்கப்பட்ட படம் என பல சிறப்புகளைப் பெற்றது. இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை. இதற்குக் காரணம் இது சராசரி கதை அம்சம் கொண்ட படங்கள் போல இல்லாமல் அதற்கும் அப்பாற்பட்டதாக இருந்தது.
சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமலின் பெரும்பாலான படங்கள் சமகாலத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. அதனால் தான் அவரை தீர்க்கத்தரிசி என்கின்றனர். ஹேராம், அன்பேசிவம், ஆளவந்தான், தசாவதாரம் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
1982ல் மட்டும் மூன்றாம்பிறை, வாழ்வே மாயம், சனம் தேரே கசம், சகலகலா வல்லவன், ஏக் தோ கமால் கோஹயா என 5 வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தார் கமல். இதுவரை எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு அசாத்திய சாதனையை செய்தது இல்லை. இந்த மாபெரும் சாதனை தான் கமலுக்கு ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தது. ஆனால் கமலோ இதிலும் தனது வித்தியாசத்தைக் காட்டி தனது பிளஸ் பாயிண்டாக்கிக் கொண்டார். ஆம். தனது ரசிகர் மன்றத்தையே நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகரானார்.