கண்ணில் காயம்...ஆனாலும் ஏவிஎம் நிறுவனத்துக்காக கருமமே கண்ணான கமல்..!
ஏவிஎம் மின் முரட்டுக்காளை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து படம் தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சாங்க. கமலிடம் இதுபற்றி கேட்க அவரும் ஒத்துக்கிட்டார். களத்தூர் கண்ணம்மாவில் 4 வயது சிறுவனாக ஏவிஎம். செட்டியார் முன் நடித்துக் காட்டியவர் கமல்.
பெரிய நடிகனா வளர்ந்த பின்னால கதாநாயகனா எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் நடிக்க வந்தார் கமல். முரட்டுக்காளையின் வெற்றிக்கூட்டணியே இதிலும் தொடர்ந்தது. அதுதான் சகலகலாவல்லவன்.
படத்தில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இளமை இதோ இதோ பாடலுக்கு பிரம்மாண்டமா அரங்கம் அமைச்சி ஏவிஎம் ஸ்டூடியோவுல படப்பிடிப்பு நடந்தது. அப்போ கமலுக்கு கண்ணுல அடிபட்டுருச்சி. காயம் ஆற 2 நாள்கள் ஆகும்கறதால படப்பிடிப்ப நிறுத்திட்டாங்க.
இதைக்கேள்விப்பட்ட கமல் இயக்குனர் முத்துராமனைத் தொடர்பு கொண்டு ஏன் சார் சூட்டிங்க கேன்சல் பண்ணினீங்க எனக்கு ஒண்ணுமில்ல. நல்லா தான் இருக்கேன். முகத்தில உள்ள காயத்துல தையல் தெரியாம இருக்க 2 நாள் லாங் மற்றும் மிட் ஷாட்டை வைத்து தையல் தெரியாமல் எடுங்க.
குளோசப் ஷாட் வேணும்னா 3வது நாள் எடுத்துக்கோங்கன்னு ஆர்வத்தோட சொன்னாரு. அவர் சொன்னபடியே 3 நாள்கள் படப்பிடிப்பு நடத்தி பாடல் எடுத்து முடிச்சாங்க. படம் தயாரானதும் ஏவிஎம் நிறுவனம் முக்கியப் பிரமுகர்களுக்காக சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்தனர். படம் பார்த்தவங்க சொன்னது தான் ஏவிஎம்.சகோதரர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
கமலை வைத்து 16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள் என்று தரமான படங்கள் வெளியாயின. அப்படிப்பட்ட நடிகரை வச்சி ஏவிஎம்ல இப்படிப்பட்ட படம் எடுத்துருக்காங்களேன்னு அவங்க சொன்னாங்க.
அவங்க அப்படி சொன்னது ஏவிஎம் சகோதரர்களுக்கு கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் படத்தை வெளியிட்டாங்க. வெளியான அன்னைக்கு விசில் பறக்க கைதட்டல்களால தியேட்டர் அதிர்ந்தது. படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெள்ளிவிழா கண்டது.
இந்தப்படத்தின் மூலமா காரில் வந்து படம் பார்ப்பவர்களின் ரசனை வேறு. சாதாரண பாமர மக்களின் ரசனை வேறு என்பதைத் தெரிந்து கொண்டனர் ஏவிஎம். சகோதரர்கள். இந்தப்படத்தின் சிறப்பம்சமா இளமை இதோ இதோ பாடலைச் சொல்லலாம். ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.