கமல்ஹாசன்-விஜயகாந்த் இணைந்த ஒரே திரைப்படம்… இரு நட்சத்திரங்கள் கைக்கோர்த்த சுவாரசிய சம்பவம்…
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் 1980களிலேயே உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள். அவர்கள் இருவரின் திரைப்படங்கள் மும்முரமாக போட்டிப்போட்டுக்கொண்டிருந்தபோது தனி டிராக்கில் வந்து மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தவர் விஜயகாந்த்.
அந்த காலத்தில் ரஜினிகாந்த்துக்கு சமமாக விஜயகாந்த்தின் திரைப்படங்கள் மாஸ் ஹிட் திரைப்படங்களாக ஓடியது. மேலும் தமிழகத்தின் பல மூலைகளில் ரஜினிகாந்த்திற்கும் கமல்ஹாசனுக்கும் சமமாக விஜயகாந்த்திற்கு ரசிகர் மன்றங்கள் உருவாகியது. இந்த வளர்ச்சியை பார்த்து ரஜினிகாந்த்தே அரண்டுபோனார் என்று கூட கூறுவார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு என்றுமே விஜயகாந்த் போட்டி நடிகராகத்தான் திகழ்ந்தார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க தொடங்கிய காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படங்களின் வசூல், ரஜினி திரைப்படங்களின் வசூலுக்கு சமமாகும் வகையில் இருந்திருக்கின்றன. அந்த அளவுக்கு தனது வசீகர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் விஜயகாந்த்.
இந்த நிலையில் கமல்ஹாசனும் விஜயகாந்த்தும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் அதுதான். அத்திரைப்படத்தின் பெயர் “மனக்கணக்கு”.
1986 ஆம் ஆண்டு ஆர். சி. சக்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதா, ராஜேஷ், சரத்பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தயாரித்தவர் மனோகர்.
தயாரிப்பாளர் மனோகர் அதற்கு முன் நடிகை ராதாவிற்கு ஒப்பனை கலைஞராக பணிபுரிந்தவர். ராதாவுடன் பல திரைப்படங்களில் பணியாற்றிய விஜயகாந்த், அவரின் மீதான நட்பின் காரணமாக இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
அதே போல் இத்திரைப்படத்தின் இயக்குனர் ஆர். சி. சக்தி, கமல்ஹாசனுடைய நெருங்கிய நண்பர். ஆதலால் கமல்ஹாசனும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் ஒரு திரைப்பட இயக்குனராக கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஜயகாந்த் கேமராமேனாக நடித்துள்ளார். இருவரும் பல காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த இருவரும் அதன் பின் எந்த திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்தான்.