அன்னைக்கு மட்டும் அந்த முடிவு எடுக்கலைன்னா?? கமல்ஹாசனின் கேரியரில் நடந்த முக்கிய சம்பவம் இதுதான்…
1973 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் பிரமீளா, சிவக்குமார், கமல்ஹாசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அரங்கேற்றம்”. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் பிரமீளாவுக்கு தம்பியாக நடித்திருந்தார்.
இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு கதாநாயகியின் தம்பி கதாப்பாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என பாலச்சந்தர் யோசித்துக்கொண்டிருந்தபோது, “களத்தூர் கண்ணம்மா” உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறுவனாக நடித்திருந்த கமல்ஹாசன் அவரின் நினைவுக்கு வந்தாராம். மேலும் பல மாதங்களுக்கு முன்பு ஜெமினி கணேசன், கமல்ஹாசனுக்கு எதாவது ரோல் கொடுக்குமாறும் பரிந்துரைத்திருந்தாராம்.
உடனே கமல்ஹாசனை ஆள் அனுப்பி வரவழைத்தார் பாலச்சந்தர். பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்த உற்சாகத்தில் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு விறுவிறுவென பாலச்சந்தரின் அலுவகத்துக்குச் சென்றாராம் கமல்ஹாசன். ஆனால் கதாநாயகனின் தம்பி ரோலுக்குத்தான் பாலச்சந்தர் தன்னை அழைத்திருக்கிறார் என்பது கமல்ஹாசனுக்கு தெரியாது.
அந்த காலகட்டத்தில் எப்படியாவது உதவி இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம் கமல்ஹாசன். மேலும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என்ற கனவும் இருந்ததாம். ஆதலால் பாலச்சந்தர் தன்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளத்தான் அழைத்திருக்கிறார் என அவரே நினைத்துக்கொண்டு அவரின் அலுவலகத்திற்குச் சென்றாராம்.
அங்கே கமல்ஹாசனை பார்த்த பாலச்சந்தர், “கதாநாயகிக்கு தம்பி ரோல் ஒன்னு இருக்கு. பண்றியா?” என கேட்டாராம். இதை கேட்டதும் மிகவும் நொந்துப்போனாராம் கமல்ஹாசன். “சார், எனக்கு உங்ககிட்ட உதவி இயக்குனரா சேரணும்ன்னுதான் விருப்பம்” என கூறினாராம். அதற்கு பாலச்சந்தர் “கதாநாயகிக்கு தம்பியா நடிக்குறதுக்குத்தான் உன்னைய கூப்பிட்டேன்” என அழுத்தமாக கூறினாராம். அதன் மூலம் “நடிக்கனும்ன்னா நடி, இல்லைன்னா கிளம்பு” என்ற அர்த்தத்தில் அவர் கூறியதாக கமல்ஹாசனுக்குத் தோன்றியதாம். தனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப தயாராக இருந்தாராம் கமல்ஹாசன்.
ஆனால் பாலச்சந்தரின் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சான்ஸ் கேட்டு அலுவலகத்திற்கு வெளியே தினந்தோறும் பல பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவரது திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரே தன்னை அழைத்து வாய்ப்பு தருகிறார், இதனை வேண்டாம் என்று கூறுவதா? என நன்றாக யோசித்தப்பின் “அரங்கேற்றம்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கமல்ஹாசன். அன்று மட்டும் கமல் அவ்வாறு சிந்திக்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தால் இந்நேரம் தமிழ் சினிமாவின் வரலாறே மாறியிருக்கும். இத்தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.