80களில் தீபாவளிக்கு வெளியாகி கடும் போட்டி போட்ட கமல்-ரஜினி படங்கள்

by sankaran v |   ( Updated:2022-10-22 18:50:47  )
80களில் தீபாவளிக்கு வெளியாகி கடும் போட்டி போட்ட கமல்-ரஜினி படங்கள்
X

Manithan vs Nayagan

ஒரு காலத்தில் தீபாவளி என்றாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்னாடி இருந்தே தீபாவளி ஜூரம் வந்துவிடும். காரணம் புத்தாடை, பட்டாசுகளை எல்லாம் காட்டிலும் தனது தலைவர் என்று சொல்லும் கமல் - ரஜினி படங்கள் ஒன்றாக வெளியாகும்.

ரசிகர்களுக்குள் கடும் மோதல் இருக்கும். தியேட்டரில் டிக்கெட் வாங்க முண்டியடிப்பார்கள். இப்போ மாதிரி அப்போ ஆன்லைன் எல்லாம் கிடையாது. மூச்சு முட்டாத குறையாக டிக்கெட் எடுத்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

வியர்வையில் நனைந்த சட்டையைக் கசக்கிப் பிழிந்து கொண்டு தான் வருவார்கள். பாதி பேர் டிக்கெட் கிடைக்காமல் அடுத்த காட்சி போடும் வரை தியேட்டர் வாசலிலேயே தவம் கிடப்பார்கள். அப்போது தீபாவளி திருநாளில் வெளியான கமல் - ரஜினி படங்களைப் பற்றி பார்க்கலாமா...

தங்கமகன் - தூங்காதே தம்பி தூங்காதே (1983)

Thangamagan

1983ல் ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளியானது. பூர்ணிமா ஜெயராம், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சக்கை போடு போட்டன. அடுக்கு மல்லிகை, மச்சான பாரடி, பூமாலை, ராத்திரியில் பூத்திருக்கும், வா வா பக்கம் வா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் நிறைந்தது.

இந்தப்படம் அதே நாளில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே படத்தைக் காட்டிலும் அதிகமான நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.

கமல் இரட்டை வேடங்களில் முற்றிலும் மாறுபட்டு சூப்பராக நடித்திருந்த போதிலும் ரஜினியின் தங்கமகன் தான் வெற்றி பெற்றது. கமல் படம் ஆவரேஜ் ஹிட்.

தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் ராதா, சுலக்ஷனா, ஜமுனா, செந்தாமரை உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்கு பிளஸ். தூங்காதே தம்பி தூங்காதே, வானம் கீழே, அட ராமா நீ நம்மக்கிட்ட, சும்மா நிக்காதீங்க, நானாக நானில்லை, வருது வருது என பாடல்கள் நம்மை ஆட்டம் போட வைத்தன.

நல்லவனுக்கு நல்லவன் - எனக்குள் ஒருவன் (1984)

Nallavanukku nallavan

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய நல்லவனுக்கு நல்லவன் படம் ரஜினிகாந்துக்கு மாஸ் ஹிட்டைக் கொடுத்தது. இந்தப்படத்திற்கு விசு திரைக்கதை எழுதியுள்ளார். இளையராஜாவின் இசை பளிச் ரகம். ராதா, கார்த்திக், துளசி, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு, உன்னைத்தானே, வச்சிக்கவா, முத்தாடுதே, நம்ம முதலாளி, என்னைத் தானே ஆகிய தேன் சிந்தும் பாடல்கள் உள்ளன.

எனக்குள் ஒருவன் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் மாறுபட்ட கெட்அப்புகளில் நடித்திருந்த போதும் படம் ரஜினியின் முன்னால் எடுபடவில்லை. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம். இளையராஜாவின் இன்னிசை. ஸ்ரீபிரியா, ஷோபனா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். எனக்குள் ஒருவன், எங்கே எந்தன் காதலி, மேகம் கொட்டட்டும், முத்தம் போதாதே, தேர் கொண்டு சென்றவன் ஆகிய பாடல்கள் உள்ளன. ரெண்டு படங்களில் சூப்பர்ஹிட் நல்லவனுக்கு நல்லவன் தான்.

படிக்காதவன் - ஜப்பானில் கல்யாண ராமன் (1985)

Padikkathavan

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, அம்பிகா நடிப்பில் உருவான படம். இளையராஜாவின் இன்னிசை படத்தைத் தூக்கி நிறுத்தியது. ஜோடிக்கிளி, ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், ஒரு கூட்டுக் குயிலாக, ராஜாவுக்கு ராஜா, சொல்லி அடிப்பேனடி ஆகிய முத்து முத்தான பாடல்கள் உள்ளன.

எஸ்.பி.முத்துராமன் இயக்க அதே ஆண்டில் வெளியான படம் ஜப்பானில் கல்யாண ராமன். கமலுடன் ராதா, சத்யராஜ், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை இருந்த போதும் படம் படிக்காதவன் முன் நிற்க முடியவில்லை.

மாவீரன் - புன்னகை மன்னன் (1986)

Punnagai mannan

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் மாவீரன். அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆனால் படம் கமலின் புன்னகை மன்னன் முன் எடுபடவில்லை.

கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படம் அப்போதைய ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கச் செய்தது. காதலர்களின் சுவாசமாக இருந்தது இப்படம். கமலுடன் ரேவதி, ரேகா, ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கமல் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் சேது, சாப்ளின் என நடித்து அசத்தியிருந்தார். இளையராஜாவின் இசை மனதை மயக்கியது. ஏதேதோ, என்ன சத்தம், வான் மேகம், கவிதை கேளுங்கள், கால காலமாக, சிங்களத்து, மாமாவுக்கு உள்பட பல பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தில் மேஸ்ட்ரோ இசைஞானி வெஸ்டர்ன் மியூசிக்கைக் கொண்டு வந்துள்ளார்.

மனிதன் - நாயகன் (1987)

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினியின் பக்காவான ஸ்டைலில் உருவான படம் மனிதன். ரூபினி, ரகுவரன், மாதுரி, ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபோஸின் இசை செம மாஸாக இருந்தது. காளை காளை, மனிதன் மனிதன், முத்து முத்து பெண்ணே, வானத்தைப் பார்த்தேன், ஏதோ நடக்கிறது ஆகிய பாடல்கள் உள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் கமலின் புதிய பரிமாணத்தில் உருவான படம். கமலுடன் சரண்யா, கார்;த்திகா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் பாடல்கள் தேன் சிந்தும் ரகம். நான் சிரித்தால் தீபாவளி, நிலா அது வானத்து மேலே, அந்தி மழை, நீ ஒரு, தென்பாண்டி சீமையிலே ஆகிய பாடல்கள் உள்ளன. ரெண்டு படங்களில் நாயகன் படம்தான் சூப்பர்ஹிட். நாயகனில் கமல் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. என்னா நடிப்புய்யா...மனுஷன் பிச்சி உதறிட்டான்யா என ரசிகர்கள் சிலாகித்தனர். மனிதன் ஆவரேஜ் ஹிட்.

மாப்பிள்ளை - வெற்றி விழா (1989)

Mappillai vs Vetri Vizha

ராஜசேகரின் இயக்கத்தில் ரஜினி, அமலா, ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்கு விருந்து. என்னதான் சுகமோ, என்னோட ராசி, மானின் இரு கண்கள், உனைத் தான் நித்தம், வேறு வேலை உனக்கு என பாடல்கள் ரசிக்கச் செய்தன. வழக்கமான காமெடி, ஸ்டைல், டான்ஸ் என பின்னி பெடலெடுத்திருப்பார் ரஜினி.

அதேவேளையில் வெளியான வெற்றிவிழாவில் கமல் - பிரபு இணைந்து நடித்து இருந்தனர். படம் ஆவரேஜ் ஹிட். சசிகலா, அமலா, குஷ்பு, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை சகாப்தம். மாறுகோ மாறுகோ என்ற ஒரு பாடலே போதும் அவர் வெற்றியைச் சொல்ல. ஆனால் மாப்பிள்ளை தான் ஜெயித்துவிட்டார்.

Next Story