இந்தியன் 2, 3 படங்கள் என்ன பேசும்னு தெரியுமா? பிறந்தநாள் பரிசாக கமல் கொடுத்த சூப்பர் அப்டேட்
கமல் பேச ஆரம்பித்ததும் உயிரே, உறவே, தமிழே என்று தொடங்கி அசத்தினார்.
69வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில் உலகநாயகன் கமல் சிறப்புரையாற்றினார்.
பிறந்தநாளுக்கு பரிசாக மாலை போடாதீர்கள். அது வாடி வதங்கி விடும். புத்தகங்கள் கொடுங்கள். அது அறிவை வளர்க்கும் பெட்டகங்கள். புத்தகங்கள் கிழிந்து போனாலும் அதிலிருந்து பெற்ற அறிவு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
இன்னைக்கு காலைல கூட குழந்தைகள் மருத்துவமனைக்குப் போய் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் கொடுக்கும் ஒரு கருவியை நிறுவி இருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்புத் தந்த வெளிநாடு வாழ் நண்பர்கள், மக்கள் நீதி மய்யத்தின் நண்பர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்னும் இதுபோன்ற கருவிகளை பல இடங்களில் நிறுவி அதை மக்கள் நீதி மய்யம் பொதுத்தொண்டாக கமல் பண்பாட்டு மையம் வழியாக அதை அவர்கள் பாதுகாத்து மக்களுக்குச் சென்றடையும்படி செய்வார்கள் என்று நம்புகிறேன்.
அதுக்கு ஏற்பாடு செயதவர்கள் MNM UK நண்பர்கள் குழு. நாங்க 40 வருடத்திற்கு முன்னாடி நற்பணி இயக்கம்னு ஆரம்பிச்சபோது நான் வந்து மொத்தமா 10... 15 வருஷத்துல ஒரு கோடி கூட கொடுத்திருக்க மாட்டேன். ஆனா இவங்க பல கோடிகளைத் தந்தாங்க. ஒரு பெருங்கூட்டத்தின் பலம் என்பது அதுதான். ஆனா எப்படின்னா நான் கொடுத்த நோட்டு கூட ப்ரஷா இருந்துருக்கலாம்.
ஆனால் சில ரூபாய் நோட்டுக்கள் வியர்வையில் நனைந்தவை. தினக்கூலிக்கு வேலை செய்றவங்க கூட மக்களுக்கு சேவை செய்யணும்கற அன்பு, பேருள்ளம் இருக்கிறது தெரியுமா? அதை மதிக்கிறேன். அதை வணங்குகிறேன். அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
நமக்கு நிறைய பணிகள் இருக்கின்றது. கடந்து வந்த பாதையை ஒருமுறை அளந்து பார்க்க வேண்டும். இன்று நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய நடக்க வேண்டிய பாதையில் சரியாக நடக்க வேண்டும். நாளை அடைய வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைவோம்.
பாராளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். சிறப்பான சூழல் நம்மை சுற்றி வலம் வரத் தொடங்கி விட்டது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியன் 2, 3 எல்லாம் வரும்போது அது ஒரு அரசியல் மேடையாக மாறும்.