அட இவங்க தானா...அந்த அம்பிகாபதி-அமராவதி..!!! தமிழ்த்திரை உலகில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டான ஜோடி
தமிழ் சினிமா உலகில் ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கதை இருந்தாலும் அடுத்ததாகப் பார்க்கப்படுபவர் நாயகனும், நாயகியும் தான்.
இந்தப் படத்தில் யார் நடிச்சிருக்காங்கன்னு கேட்டு விட்டுத் தான் ரசிகர்கள் படம் பார்க்கவே செல்வார்கள். தங்களுக்கு பிடித்த அபிமான நட்சத்திரங்கள் என்றால் மட்டுமே அந்தப் படத்திற்குச் செல்வார்கள்.
சில படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் பார்ப்பதற்கு அழகாகவும் ஸ்மார்ட்டாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்காது. அதனால் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையாமல் போய்விடும். சில படங்களில் இருவருக்கும் நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகும்.
அதென்ன கெமிஸ்ட்ரி என்றால் ஜாதகத்தில் 10க்கு 10 பொருத்தம் பார்ப்போமே...அது போலத் தான் இதுவும். இருவரையும் பார்த்த உடனே நமக்கு நல்ல ஜோடிப் பொருத்தம் என்று தோன்றி விடும். இருவரும் பேசுகையிலும், சிரிக்கையிலும், ஆடுவதிலும், பாடுவதிலும் ஒரு நளினம், அழகு இழையோடும்.
அவர்கள் காட்சிகளில் தோன்றி விட்டாலே நமக்குள் ஒருவித பரவசம் கிளர்ந்தெழும். படத்தைப் பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் தாங்களே அந்த நாயகன் போல நினைத்துக் கொண்டும், தனக்கு ஜோடியாகவே அந்த நாயகியை நினைத்துக் கொண்டும் படத்தை ரசித்துப் பார்ப்பார்கள்.
ஒரு கட்டத்தில் படத்தின் கதையும் அவர்களுக்குப் பிடித்து விட படத்தின் காட்சியின் ஊடாகவே ஒன்றிப் போய் விடுவார்கள். அப்புறம் என்ன படம் சக்சஸ் தான்.
பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி விடும். அவர்கள் விரும்பும் காட்சிகளும், நகைச்சுவையும், பாடல்களும், சண்டைக்காட்சிகளும் தேவையான சமயத்தில் பஞ்சமில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல ரசிகனும் ரசித்து படத்தைப் பார்த்து முடித்து மனநிறைவோடு திரையரங்கை விட்டு வெளியே வருவான்.
அப்பாடா கொடுத்த காசுக்கு ஏற்ப நல்ல படம் பார்த்தாச்சுடா என சக நண்பர்களுடன் மகிழ்ந்து பேசியபடியே செல்வான். தயாரிப்பாளர்களும் சரி. நடிகர்களும் சரி. இதைத் தான் விரும்புவார்கள்.
நல்ல கனக்கச்சிதமாக பொருந்தும் ஜோடியை அம்பிகாபதி, அமராவதி ஜோடி என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று உலகநாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசனின் படங்களில் அதிகமாக ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி தான். இருவருக்குள்ளும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது.
அதனால் தான் இருவரும் இணைந்து 27 படங்கள் நடித்து விட்டார்கள். தமிழ்த்திரை உலகின் சிறந்த ஜோடி என்றும் பெயர் பெற்றுவிட்டார்கள். இருவருக்குள்ளும் மற்றொரு ஒற்றுமை உண்டு. இருவரும் 4 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
சிகப்பு ரோஜாக்கள்
பாரதிராஜாவின் இயக்கத்தில், பாக்யராஜின் வசனத்தில்1978ல் வெளியான படம். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். பெணகளால் பாதிக்கப்படும் கமல் ஒரு கட்டத்தில் அவர்களையே வெறுத்து விடுகிறார். அதனால் சைக்கோ மாதிரி ஒவ்வொரு பெண்களையும் கொன்று கொண்டே இருக்கிறார்.
ஸ்ரீதேவியையும் காதலிப்பது போல் நடித்து அவரையும் கொல்லத் துணிகிறார். அடுத்து அடுத்து நடக்கும் கதையின் திருப்பங்கள் ரசிகனை சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்து விடுகிறது.
பக்கபலமாக இளையராஜாவின் பின்னணி இசை இருக்கிறது. பயப்படும் கேரக்டரில் வரும் ஸ்ரீதேவி நம்மையும் பயமுறுத்தி விடுகிறார். கமலும் பதிலுக்கு நல்லாவே மிரட்டுகிறார்.
மூன்றாம் பிறை
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982ல் வெளியானது. ஒரு விபத்தின் காரணமாக மனநலம் குன்றியவராக வரும் ஸ்ரீதேவி மிக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக வரும் கமல் செம ஸ்மார்ட் லுக்குடன் நடித்துக் கலக்கியிருப்பார்.
கிளைமாக்ஸ் வரை ஸ்ரீதேவி கலக்கியிருப்பார். கிளைமாக்ஸில் கமல் கலக்கியிருப்பார். நடிப்பில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து இருந்தனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
வறுமையின் நிறம் சிகப்பு
1980ல் இயக்குனர் சிகரம் பாலசந்தரின் படைப்பாக வெளியான படம். தலைப்பிற்கேற்ற வகையில் படத்தில் அருமையான கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கமல், ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி வழக்கம்போல நல்லா ஒர்க் அவுட்டாகியுள்ளது.
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி என்ற பாடலில் இருவரும் காட்டும் முகபாவனைகள் இன்றும் ஒரு ரசிகனின் மனது கல் போன்று இருந்தாலும் கரைந்து விடச்செய்து விடும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
வாழ்வே மாயம்
1982ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம். புற்றுநோயால் பாதிக்கப்படும் இளைஞன் தனது நோயைக் காதலியிடம் காட்டாமல் மாறாக அவளை வெறுப்பது போல ஒதுக்கி கடைசியில் உயிரை விடுகிறான்.
கதையில் நாயகனாக வரும் கமலும், நாயகியாக வரும் ஸ்ரீதேவியும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து வெகு அருமையாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர்.
கங்கை அமரனின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ் ஹிட். கமல், ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி செம சூப்பர். படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இருவரது நடிப்பும் அபாரமாக இருக்கும்.
ஸ்ரீபிரியா, அம்பிகா, பிரதாப் போத்தன், மனோரமா, ஜெய்சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். அருமையான காதல் கதை. வழக்கம்போல துள்ளலான கமலின் காதல் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.