மேக்கப்பில் கவனம் செலுத்த அவர்தான் காரணம்.. கமல் நெகிழ்ச்சி
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழ்த்திரை உலகின் தவப்புதல்வன். இவர் சினிமாவில் நடிக்க மாட்டார். கதாபாத்திரமாகவே மாறி விடுவார். அதனால் தான் நடிப்பின் இமயமானார். இவரைப் பற்றி உலக நாயகன் கமல்ஹாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை எப்போது இருந்து உங்களுக்குத் தெரியும் என்று கேட்டால் சூரியனை எந்த வயதில் இருந்து தெரியுமோ அந்த வயதிலிருந்து தெரியும் என்பேன்.
மூன்றரை வயதில் இருந்தே நான் அவரது வீட்டுப்பிள்ளை. சிவாஜிக்கு அவரது மகன்கள் ராம்குமார், பிரபு. மகள்கள் சாந்தி, தேன்மொழி எப்படியோ அதே மாதிரி தான் நானும். இதை அவர்கள் குடும்பத்தினரும் மறுக்க மாட்டார்கள்.
சினிமாவைப் பொறுத்தவரை அவர் ஒரு துரோணாச்சாரியார். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவரை அவரது வித்தைகளை தூரத்திலிருந்தே கற்றுக் கொண்ட ஏகலைவன் நான்.
நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற அத்தனை கலைஞர்களும் தான். பழம் தின்னு கொண்டை போட்டாவன்னு கிராமத்துல சொல்வார்கள். சினிமாவைப் பொறுத்தவரை அது சிவாஜி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். காடுகள் இல்லாத இடமே இல்லை.
இந்த மரங்கள் எல்லாம் யார் விதைத்தது? பறவைகள் உலகில் எங்கெங்கோ பறந்து அவை போட்ட எச்சத்தில் முளைத்தவை தான் இந்த மரங்கள்.
சிவாஜி தான் பறவைகள். அவரால் வளர்ந்த மரங்கள் தான் நாங்கள் எல்லாம்.
அதனால் தான் அவரது இறுதி ஊர்வலத்தில் அத்தனை கலைஞர்களையும் காண முடிந்தது. எள் போட்டால் எண்ணையாகும் அளவுக்கு கூட்டத்தைக் காண முடிந்தது.
மற்றவர்களை விட சிவாஜியை நன்கு அறிந்தவன். தெரிந்தவன் நானாகத் தான் இருக்க முடியும். அதற்காக அவரை அடிக்கடி சந்திக்கவும் மாட்டேன். அவர் ஒரு அற்புதமான இனிப்பைப் போன்றவர். அதை அவ்வப்போது திகட்டாத அளவுக்கு எடுத்து உண்பேன்.
எங்கள் திரை உலகின் முதல்வர் சிவாஜி. எனக்கு அரசியல் தெரியாது. அதே சார்புடைய நிலையில் சிவாஜியும் இருந்ததால் நான் சந்திப்பது அவரை மட்டும் தான். எனக்கு அவர் தான் முதல்வர். என் மானசீக குருவும் அவரே. நடிப்பில் வாரி வழங்கும் வள்ளல்.
அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். அவர் வாரி வழங்குகிறார் என்பதற்காக அவரிடம் இருப்பதை எல்லாம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை.
எப்போது எனக்குத் தேவைப்படுகிறதோ அப்போது போய் பெற்றுக் கொள்வேன். தேவர் மகன் படமும் அப்படித்தான். என் மீது அவருக்குத் தனி அன்பு உண்டு. ஒரு படத்தில் நான் ஒட்டு தாடி ஒட்ட வைத்து நடித்திருந்தேன். படத்தைப் பார்த்தவர் என்னடா நீ...இப்படி அசிங்கமாவா தாடியை வைத்திருப்பது?
நடித்தால் மட்;டும் போதாது. மேக்கப்பிலும் கவனம் செலுத்தணும். அவன் தான் நடிகன் என்றார். அதற்கு அப்புறம் தான் மேக்கப்பிலும் கவனம் செலுத்தினேன்.
நாயகன் படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் என்னை அப்படியே கட்டி அணைச்சுக்கிட்டார். என் காது அருகே மெல்லிய குரலில் ரொம்பப் பெருமையா இருக்குப்பா என்றார். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைத்த சந்தோஷம். நான் அவரது காலில் விழுந்து வணங்கினேன்.
சிவாஜியை இழந்து திரையுலகம் இன்று வெற்றிடமாக உள்ளது. அது அப்படியே தான் இருக்கும். யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் திலகம் ஒரு சரித்திரம். அது மீண்டும் திரும்பாது. கவிதைக்கு ஒரு பாரதி என்றால் கலைக்கு ஒரு சிவாஜி. முதல் கலைஞனும் அவர் தான். கலை முதல்வரும் அவர்தான்.