ரஜினிக்கு போட்டி விஜய் இல்ல!...நான்தான்!...விக்ரம் மூலம் நிரூபித்த உலக நாயகன்....
ரஜினிக்கு முன்பே சினிமாவில் ஹீரோ ஆனவர் கமல்ஹாசன். இன்னும் சொல்லப்போனால் பெரிய ஸ்டராக இருந்தார். இதை ரஜினியே பல முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆனால், கமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருந்த போது ரஜினி வளர்ந்து சூப்பர்ஸ்டாராக மாறினார். கமலுக்கு ரஜினியே போட்டியாக பார்க்கப்பட்டார்.
ரஜினி-கமல் இருவரின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் போட்டியாக பார்த்தனர். ரஜினி -கமல் படங்கள் ஒன்றாக வெளியானால் இருவரின் ரசிகர்களும் போட்டி போடுவார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினியின் மார்க்கெட் மேலே சென்றது. கமலை விட பல மடங்கு சம்பளம் வாங்க துவங்கினார் ரஜினி.
கமல் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டாலும், ரஜினி சூப்பர்ஸ்டாராக மாறி அவரின் திரைப்படங்கள் ஜப்பானில் கூட சக்கை போடு போட்டது. ரஜினி படங்கள் வியாபாரம் உச்சத்துக்கு சென்றதை கமலும் உணர்ந்திருந்தார்.
இடையில் விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார் கமல். அதேநேரம் விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் கடந்த 4 வருடங்களாக கமல் திரைப்படங்களில் நடிக்கவே இல்லை. அரசியல், பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பிஸி ஆனார்.
இந்த இடைவெளியில் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற துவங்கியது. ரஜினிக்கு அடுத்து விஜய் திரைப்படங்கள் அதிக வசூலை பெற்றது. தற்போது ரஜினியின் வியாபாரத்தையும், சம்பளத்தையும் விஜய் தொட்டுவிட்டார். ரஜினிக்கு போட்டி விஜய் என மாறிவிட்டது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் வெளிநாடுகளில் கூட நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.66.27 கோடியும், உலக அளவில் ரூ.150 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் ரூ.65.45 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. அஜித்தின் வலிமை திரைப்படமும் பெரிய வசூலை பெறவில்லை.
மேலும், கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் திரைப்படங்களும் ரசிகர்களை கவர்வதில்லை. அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவும் இல்லை. ரசிகர்களை கவரவும் இல்லை.
தற்போது, 4 வருடங்கள் கழித்து விக்ரம் எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரஜினிக்கு போட்டி நான்தான் என நிரூபித்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். கமலின் விக்ரம் பட வெற்றி ரஜினி,விஜய்,அஜித் ஆகியோர்களின் மார்க்கெட்டை அசைத்துள்ளது.
திரையுலகில் போட்டி என்பதுமே ரசிகர்களுக்கு விருந்துதான்....