“பரீட்சை இருக்கு, ஷூட்டிங்க நிப்பாட்டுங்க”… விருமாண்டி படப்பிடிப்பில் கண்கலங்க வைத்த கமல்
கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பசுபதி, நெப்போலியன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விருமாண்டி”. இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து இயக்கியிருந்தார்.
கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முதலில் “சண்டியர்” என பெயர் வைத்திருந்தனர். இந்த டைட்டிலால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் “விருமாண்டி” என டைட்டில் வைக்கப்பட்டது.
நான் லீனியர் திரைக்கதையாக உருவான இத்திரைப்படம் சினிமா விரும்பிகளால் இப்போதும் கொண்டாடப்படுகிறது. பல சினிமா பயிற்சி பட்டறைகளில் இத்திரைப்படம் குறித்து கலந்துரையாடல்கள் பல நடந்துள்ளன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே எப்போதும் பேசுப்பொருளாக இருந்து வருகிறது “விருமாண்டி” திரைப்படம். இவ்வாறு தமிழின் ஒரு முக்கிய படைப்பாக விளங்கிவரும் “விருமாண்டி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை காதல் சுகுமார் சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது “விருமாண்டி” திரைப்படத்தின் நீதிமன்ற காட்சிகளை ஒரு பள்ளியில் விடுமுறை நாளில் எடுத்துக்கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் இருந்து சில பேச்சு சத்தங்கள் கேட்டிருக்கின்றன. “விருமாண்டி” திரைப்படம் லைவ் ஆடியோவில் உருவான திரைப்படம். ஆதலால் படப்பிடிப்பில் தேவையில்லாத சப்தங்கள் இடம்பெறக்கூடாது.
இதனை மனதில் வைத்து கமல் “சைலன்ஸ்” என கத்தியிருக்கிறார். ஆனால் அந்த சத்தம் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது. படக்குழுவினரில் சிலர் எங்கு இருந்து சத்தம் வருகிறது என பார்க்க ஓடினர். அப்போது பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்பு ஒன்று நடந்துகொண்டிருந்து இருந்திருக்கிறது. இதனை கமலிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
அதற்கு கமல்ஹாசன் ‘இன்னைக்கு பள்ளி விடுமுறை என்று நினைத்து தானே இங்கு படப்பிடிப்பை தொடங்கினேன்” என கூறினார்.
அதற்கு சுகுமார் தான் சென்று அவர்களின் வகுப்பை நிறுத்தச்சொல்லவா? என கேட்டிருக்கிறார். அதற்கு கமல்ஹாசன் “இல்லை, அவர்கள் படிக்கட்டும். நான் படித்திருந்தால் இந்த வேலைக்கே வந்திருக்கமாட்டேன்” என கேலியாக கூறியிருக்கிறார்.
ஒரு நாள் படப்பிடிப்பு நின்றுபோனாலும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனாலும் கமல்ஹாசன் அதைபற்றி எல்லாம் கருத்திகொள்ளாமல் மாணவர்கள் படிப்பின் முக்கியத்துவதை புரிந்து படப்பிடிப்பை நிறுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.