சேர்ந்தே இருப்பது கலையும் கமலும்....! பிரிக்க முடியாதது...நம்மவரும் டெக்னாலஜியும்...!!
உலகநாயகன் கமல் தமிழ்சினிமாவுக்குக் கொண்டு வந்த தொழில்நுட்பங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒருசில உங்கள் பார்வைக்கு...
தமிழ்சினிமாவையும் கமலையும் அவ்வளவு சீக்கிரத்தில் பிரித்துவிட முடியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தது. புதிதாக ஒரு வழிதடத்தைத் தமிழ்த்திரை உலகிற்குக் கொண்டு வந்தவர் கமல்.
அதில் உரத்த சிந்தனைகள் பல உண்டு. அதே போல் தொழில்நுட்பங்களுக்கும் இடம் உண்டு. இனி நாம் டெக்னாலஜியைப் பார்வையிடுவோம்.
மைக்கேல் மதன காமராஜன்
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மார்ஃபிங் டெக்னாலஜியைக் கொண்டு வந்தார். அதே படத்தில் தான் லேப்டாப்பையும் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகப்படுத்துவார். தமிழ்சினிமாவில் முதன்முதலாக கம்ப்யூட்டர் உதவியுடன் மார்பிங் டெக்னாலஜி செய்து முக பாவனைகளை மாற்றம் செய்யலாம் என அறிமுகப்படுத்தினார்.
குணா, இந்தியன்
குணா படத்தில் ஸ்டெடிகேம் என்ற ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தார். அதாவது கேமராவை நிலையாகப் பொருத்தி வைத்த காலத்தில் நீளமான தொடர்ச்சியான காட்சிகளைப் பதிவு செய்ய இயலாது.
ஸ்டெடிகேம் பயன்படுத்தி முதல் முதலாக எடுக்கப்பட்ட படம் குணா. இதனால் கதாபாத்திரத்தை பின்தொடர்ந்து காட்சி அமைப்பது எளிதாக இருக்கும்.
இந்தியன் படத்தில் புராஸ்தடிக் மேக்கப்பை அறிமுகப்படுத்தினார். அதாவது மேக்கப்பில் அடுத்த நிலை இது. ஆர்டிபிஷியல் மேக்கப் எனப்படும் இது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட படம் இந்தியன். இதன் பிறகு தான் கெட்டப் சேஞ்ச் எல்லாம் எளிதானது.
குருதிப்புனல்
குருதிப்புனல் படத்தின் மூலம் டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டம் முதன்முதலாக வெள்ளித்திரைக்கு வந்தது. திரையரங்குகளில் துல்லியமான டிஜிட்டல் ஒலியை கொடுக்கக்கூடிய டிடிஎஸ். சவுண்ட் சிஸ்டத்தை இந்தப் படத்தில் தான் முதன்முதலாகக் கொண்டுவந்தார்கள். பாடலே இல்லாத முதல் கலர் தமிழ்ப்படமும் இதுதான்.
விருமாண்டி, ஹேராம்
விருமாண்டி மற்றும் ஹேராம் படங்களில் ஒரு புதுமை செய்யப்பட்டிருக்கும். அதாவது லைவ் ரிகார்டிங். இதைச் செய்வதில் பல சவால்கள் உள்ளன. இதைத் தவிர்க்கவே ஸ்டுடியோவில் டப் செய்வர்.
ஆனாலும் லைவ் ரிகார்டிங்கிற்கு இணையாகாது. காட்சிகளின் உணர்வுப்பூர்வம், உண்மைத்தன்மை அதிகரிக்க லைவ் ரிகார்டிங் செய்தார் கமல்.
மகாநதி
மகாநதி படத்தில் அவிட் சாப்ட்வேர் எடிட்டிங் முறை கையாளப்பட்டது. அதாவது எடிட்டிங்கில் அடுத்த தலைமுறை சாப்ட்வேர் இது. தமிழ்த்திரை உலகுக்கு இதுதான் முதல் படம்.
ஆளவந்தான்
அதே போல ஆளவந்தான் படத்தில் தான் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் 2டி அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றது. பொதுவாக டபுள் ஆக்ஷன் என்றாலே டூப் போடுவார்கள்.
ஆனால் இதில் டூப் போடாமல் மோஷன் கேப்சர் மூலம் ஒரே நடிகரே மோனோ ஆக்டிங் செய்து இணைக்கலாம் என எடுத்துக் காட்டினார் கமல்.
மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் படத்தைப் பதிவு செய்தல், 2டி வடிவிலான அனிமேஷன் காட்சிகள் உருவாக்கிப் பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.
மும்பை எக்ஸ்பிரஸ்
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்பட்டது. அதாவது முன்காலத்தில் பிலிம் ரோல் கேமராவில் படம்பிடித்து அதனை வெட்டி ஒட்டிய காலத்தில் நிறைய சிரமங்கள் இருந்தன.
டிஜிட்டலில் ரெக்கார்ட் செய்தால் எளிதாக அழிக்கவும் கோர்க்கவும் முடியும் என்பதனைக் கொண்டு வந்தது மும்பை எக்ஸ்பிரஸ் படம்.
வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு படத்தில் சூப்பர் 35 எம்எம் கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்தப்படம் தான் முதன் முதலாக தமிழ்த்திரை உலகிற்கு ஹெச்டி பிரிண்டை அறிமுகப்படுத்தியது.
அதற்கு முன்னர் 30 கேமரா மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் தான் சூப்பர் 35 கேமரா பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு 720 பிக்சல் (ஹெச்டி) படங்கள் வந்தன.
விஸ்வரூபம், விக்ரம்
விஸ்வரூபம் படத்தில் ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டம் அறிமுகமானது. இது டிஜிட்டல் இசையில் அடுத்த தலைமுறை. அதே போல தமிழ்சினிமாவில் கம்ப்யூட்டர் மூலமாக இசையைப் பதிவு செய்த படம் விக்ரம். கம்ப்யூட்டர் ரெகார்டிங் மியூசிக் என்றாலே நம் நினைவுக்கு வருவது விக்ரம் படம் தான்.
தேவர் மகன், பேசும்படம்
தேவர் மகன் படத்தில் ஸ்கிரீன்பிளே ரைட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. தமிழில் முதன்முதலாக சாப்ட்வேர் மூலமாகத் திரைக்கதை எடுதப்பட்டது.
வசனமே இல்லாமல் கமல் படம் ஒன்று வெளியானது. அது பேசும்படம். தமிழில் வெளியான முதல் வசனமில்லாத பேசும்படம் இதுதான்.
தமிழ்சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே கலைஞானி கமலின் தீராத ஆசை. இந்த ஆசை இன்னும் தொடர்ந்து பல அற்புதங்களை செய்யும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.