தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் கிளைமேக்ஸ் இந்தி படத்தின் அசல் காப்பி என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன நடந்தது...
கமல் நடிப்பில் உருவான படம் தூங்காதே தம்பி தூங்காதே இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹெலிகாப்டர் எல்லாம் போட்டு செம ஸ்டைலாக எடுத்திருப்பார்கள். ஆனால், இது இந்தி படக்காட்சி என்பது தான் சுவாரஸ்யமே.
1983ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தூங்காதே தம்பி தூங்காதே. எஸ். பி. முத்துராமன் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். ஏ. வி. எம் புரொடக்சன்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றாது. ஆனால் இதற்கு ஏவிஎம் ரொம்பலாம் செலவு செய்யவில்லையாம்.
1979ம் ஆண்டு இந்தியில் தர்மேந்திரா, ஹேமமாலினி ஆகியோர் நடித்த திரைப்படம் தில் கா ஹீரா. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் அதள பாதாளத்தில் தான் இருந்ததாம். இது அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தினை கொடுத்ததாம். இதை ஏதேச்சையாக ஏவிஎம் சரவணனிடம் இந்திப்பட தயாரிப்பாளர் லக்ஷ்மணன் கூறினார். ஹெலிகாப்டர் போட்டெல்லாம் கிளைமேக்ஸ் எடுத்தோம். ஆனா நஷ்டம் ஆகிவிட்டது என்றார்.
உடனே ஏவிஎம் சரவணன் அந்த கிளைமேக்ஸை நான் பார்க்கலாமா எனக் கேட்டார். கிளைமேக்ஸ் காட்சி காட்டப்பட்டது. அதை பார்த்த ஏவிஎம் சரவணன் இந்த கிளைமேக்ஸை நான் பயன்படுத்திக் கொள்ளவா எனக் கேட்டு இருக்கிறார். இந்தி தயாரிப்பாளருக்கோ இருக்கும் நஷ்டத்தில் கொஞ்சமாவது சரியாகட்டுமே என நினைத்து ஓகே சொல்லிவிட்டார்.
30 ஆயிரம் கொடுத்து அந்த கிளைமேக்ஸை வாங்கி வந்த சரவணன் தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் இயக்குனர் எஸ்.பி. முத்துராமனிடம் கொடுத்தார். கதையின் ஆசிரியர் பஞ்சு அருணாச்சலமுடன் அதை பார்த்த முத்துராமனுக்கே இதை எப்படி பயன்படுத்துவது எனக் குழப்பமே வந்ததாம். அப்போது ரீமேக் படங்களுக்கு திரைக்கதை கதை எழுதுவதில் கில்லாடியான விசுவை அழைத்து காட்டி இருக்கிறார்கள். அவரின் வழிகாட்டுதலின்படி, குளோசப்பில் கமல் ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போல் எடிட்டர் விட்டல் வெட்டி ஒட்டி, காரில் செந்தாமரையை தனியாக காட்சிப்படுத்தி படத்தினை முடித்தனர். இந்தி காட்சிகள் தெரியாத அளவு எடிட்டிங்கில் காட்டிய மேஜிக் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.