மக்களின் மனங்களில் இன்று வரை வாழ்ந்து வரும் கல்விக்கண் திறந்த காமராஜர்

by sankaran v |
மக்களின் மனங்களில் இன்று வரை வாழ்ந்து வரும் கல்விக்கண் திறந்த காமராஜர்
X

Kamarajar

தமிழக முதல் அமைச்சராக இருந்து ஏழை எளிய மக்களின் துயர் துடைத்தார். இவரை மக்கள் ஏழைப்பங்காளன் என்றே அழைத்து மகிழ்ந்தனர். முதல் அமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை நாட்டுக்குத் தந்தார். அணைகள் பல கட்டினார். தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Kamarajar

மிக முக்கியமாகக் கல்விக் கண்ணைத் திறந்தார். ஆம் ஏழை எளிய மாணவிகளும் படிக்க வேண்டும் என்பதற்காக பல கல்விக்கூடங்களைக் கட்டினார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

குமாரசாமி, சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் 1903, ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார் கர்மவீரர். படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, கிங்மேக்கர், பெருந்தலைவர், செயற்கரிய செயல்களைச் செய்வதில் உத்தமர், கருப்பு காந்தி என்பன இவருக்கு மக்கள் கொடுத்த பட்டங்கள். உயரமான இந்த மனிதர் உள்ளத்திலும் உயர்ந்தவர்.

Kamaraj

2004ல் ஏ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் காமராஜ் படம் வெளியானது. இந்தப்படத்தில் ரிச்சர்டு மதுரம் காமராஜராக அச்சு அசலாக பொருந்தினார். அவரது நடிப்பும் அந்த அளவுக்கு பெயர் சொல்லும் படி இருந்தது. இவருக்கு காமராஜரின் குரலைக் கொடுத்தவர் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடன் மகேந்திரன், வி.எஸ்.ராகவன், சாருஹாசன், விஜயன், விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பெரியார் ஈ.வே.ராமசாமி வேடத்தில் நடித்து இருப்பவர் விஜயகுமார்.

இந்தப்படத்தில் வரும் வசனங்கள் யாவும் எளிய நடையில் இருந்தன. அதனால் படம் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் படத்தை எடுத்திருப்பார்கள்.

கதைப்படி அவர் சிறு வயதில் இருந்து இறுதிக்காலம் வரை படிப்படியாக நடக்கும் மாற்றங்களை அழகாக எடுத்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவரது செல்வாக்கு, அரசியல்வாதியாக மாறும் போது அவருடைய வளர்ச்சி அதன்பின்னர் அவர் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்வது என படம் நகர்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவர் தமிழக முதல்வரானதும் என்னென்ன சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டுமோ அவற்றை உடனடியாக விரைந்து நிறைவேற்றுவது அவரின் மேல் மக்களுக்கு மிகுந்த மரியாதையையும் நம்பிக்கையையும் ஊட்டின.

Kamaraj

கல்வியில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வரும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளில் மிகப்பெரிய ஒன்று. நீர்ப்பாசனத்திட்டங்கள், தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக அவர் காட்டிய அக்கறை இன்றளவும் மறக்க முடியாது.

இவ்வளவு ஏன்...இந்த மாபெரும் மனிதர் ஒரு முதல்வராக இருந்து இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்துள்ளார் என்றால் அவர் எவ்வளவு எளிமையானவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனம் செய்த போது அதைக் கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1976ல் இந்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கௌரவித்தது. இவரது பிறந்தநாளான ஜூலை 15, இன்றும் தமிழகப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சிநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Next Story