Cinema History
ஒரே மெட்டில் ரெண்டு கதைகளை சொன்ன கண்ணதாசன்.. எந்தப் படத்தில் தெரியுமா?..
1965ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் சாந்தி. நடிகர் திலகம் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நண்பர்கள். பார்வையிழந்த பெண்ணாக வருகிறார் விஜயகுமாரி. முதலில் சிவாஜி பெண் பார்க்க செல்கிறார். அவரது அம்மாவால் ஒத்துக்காமல் வந்து விடுவார். பிறகு எஸ்.எஸ்.ஆரின் சித்தப்பா எம்.ஆர்.ராதா பணத்துக்கு ஆசைப்பட்டு எஸ்எஸ்ஆருக்கு விஜயகுமாரியைக் கட்டி வைத்து விடுகிறார். அதன்பிறகு தான் அந்தப் பெண் பார்வையிழந்தவர் என்பது தெரியும். அதனால் கோபித்துக் கொண்டு எஸ்எஸ்ஆர் வெளியே சென்று விடுகிறார். போன பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்தப் படத்தோட கதை.
இந்தப் படத்தில் வரும் செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் என்று விஜயகுமாரி தன் கணவரைத் தேடி பாடுவது போல அமைந்து இருக்கும். அதில் என் கணவர் மீண்டும் வருவார் என கடிதம் அனுப்ப அதை வாசிப்பது தான் எஸ்.எஸ்.ஆர். இவரது குரலுக்கு பி.பி.ஸ்ரீநிவாசன் பாடியிருப்பார்.
அடுத்து எஸ்எஸ்ஆர் இறந்து போயிருப்பார் என்ற தகவல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சிவாஜி தன் நண்பன் மாதிரி விஜயகுமாரியிடம் நடித்துக் கொண்டு இருப்பார். ஆனால் தன் நண்பனின் மனைவி என்று தொடக்கூட மாட்டார். இந்த இடத்தில் வரும் அந்தப் பாடலை பி.சுசீலா பாடுகிறார். தன் பக்கத்தில் கணவர் இருந்தும் தன்னைத் தொடக்கூட மாட்டேங்குறாரே என்ற ஏக்கத்தில் பாடுவதாக அமைந்து இருக்கும்.
இந்த இரு பாடல்களிலும் மிக நுட்பமான விஷயங்களை இசை அமைப்பாளர்கள் எம்எஸ்விஸ்வநாதன் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசனும் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். செந்தூர் முருகன் கோவிலிலே சேதியை நான் கேட்டேன். சேவல் கூவும் காலையிலே பாடலை நான் கேட்டேன் என்று எழுதியிருப்பார். இதில் சுசீலா பாடும் வரிகளில் கண்கள் இரண்டை வேலென எடுத்துக் கையோடு கொண்டானடி, கன்னியின் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி… என அருமையாக எழுதியிருப்பார்.
அதே போல் பிபிஸ்ரீநிவாஸ் லட்டரை வாசிக்கும்போது நாளை வருவான் நாயகன் என்று நல்லோர்கள் சொன்னானடி, நாயகன் தானும் ஓலை வடிவில் வந்தானடி என்று எழுதியிருப்பார் கவியரசர். இப்படி இரு பாடல்களிலும் வரிகளிலும், இசையிலும் ஜாலத்தைக் காட்டி வித்தியாசமாக வந்த பாடல் தான் இது.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.