கவிஞர் வாலிக்கு ஆர்டர் போட்ட கண்ணதாசன்... இது பொறாமையா, போட்டியா?
தமிழ்த்திரை உலகில் 'வாலிபக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர் வாலி. இவரது பாடல்கள் அப்படித் தான் இருக்கும். என்றும் இளமைத்துள்ளலுடன். ஆனால் அவர் தத்துவப் பாடல்களையும் எழுதி இருக்கிறார் என்பது பலரும் அறியாத விஷயம்.
இவர் எழுதிய ஒரு பாடலை பலரும் இது கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்து விட்டார்களாம். ஆனால் அதுதான் தனக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் வாலி. அந்தப் பாடல் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாடல்.
இந்தப் பாடலில் 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...' என்ற வரிகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.
கண்ணதாசனைப் பற்றி சொல்லவே வேண்டாம். தத்துவப் பாடல்கள் என்றால் அவர் தான் ராஜா. 'ஆண்டவன் கட்டளை'ப் படத்தில் 'ஆறு மனமே ஆறு' என்ற பாடலில் ஆறு கட்டளைகளைப் போட்டிருப்பார். அதில் மனித வாழ்வின் இன்ப, துன்பங்கள் சரிசமமாகப் பாவிக்கப்பட்டு இருக்கும். கட்டளைகள் ஒவ்வொன்றும் மனதைப் பக்குவப்படுத்தும். அதில் 'ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா' என்று ஒரு வரி போட்டு இருப்பார். அதே போல அவரும் ஆசை கொள்வதில்லை.
'சாரதா' என்ற படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பாடல் எழுதியவர் கண்ணதாசன். அதில் பாடல்களால் தான் படம் வெற்றி என கண்ணதாசன் சொல்ல, இது தனது வெற்றி என இயக்குனர் சொல்ல இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி வந்து விட்டது. இதனால் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் வாலியை எழுத வைத்தார். அது கற்பகம் படம். அவர் நினைத்தது போலவே அத்தனைப் பாடல்களும் ஹிட்.
படகோட்டி படத்தில் 'கரை மேல் பிறக்க வைத்தான்' பாடலில் 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும். கடல் தான் எங்கள் வீடு' என்று வாலி எழுதியிருப்பார். அதைக் கேட்டதும் கண்ணதாசன் அவரது வீடு தேடிச் சென்று தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பரிசாக அளித்தாராம்.
அதே நேரம் தனக்கு இவர் போட்டியாக வந்து விட்டாரே என்று கண்ணதாசன் ஒரு போதும் எண்ணியது இல்லை. மாறாக அவர் மீது அன்பு காட்டத் தொடங்கினார். வாலி பிரபலமாகும் போது கண்ணதாசன் அவருக்கு 3 அன்புக் கட்டளைகளை இட்டார்.
எந்தக் கட்சியிலும் சேராதே, சொந்தப் படம் தயாரிக்காதே, ஒன்றிருக்க மற்றொன்றை நாடாதே. ஆகா எவ்வளவு உன்னதமான உண்மைகள். இதெல்லாம் கவிஞரின் அனுபவ உண்மைகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?