ரேடியோவில் வந்த பாட்டை கேட்டு வருத்தப்பட்ட கண்ணதாசன்… கவியரசருக்கு இப்படி ஒரு மனசா!!
கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் காலத்தை தாண்டி நிற்கக்கூடிய ஒன்று என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அப்படிப்பட்ட கண்ணதாசன் ரோட்டோரத்தில் ரேடியோவில் கேட்ட ஒரு பாடலை கேட்டு மிகவும் வருத்தப்பட்டாராம். ஏன் தெரியுமா?
உளுந்தூர்பேட்டை பகுதியில் ஒரு சின்ன ஹோட்டல் கடைக்குள் தனது சகாக்களுடன் புகுந்திருக்கிறார் கண்ணதாசன். அந்த பகுதியில் அனைவரும் கண்ணதாசனை பார்க்க சூழ்ந்துகொண்டார்களாம். அந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது ஒரு பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்ததாம்.
காருக்குள் ஏறப்போன தனது சகாக்களை அழைத்த கண்ணதாசன், “இந்த பாடலை கேட்டு முடித்துவிட்டப் பிறகு போகலாம்” என கூறினாராம். அந்த பாடலை அந்த ரோட்டோரத்தில் நின்று கண்ணதாசன் கேட்டுக்கொண்டிருக்க, அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.
அந்த பாடல் முடிவடைந்த பின் அனைவரும் காரில் ஏறினர். கார் புறப்பட்ட பிறகு கண்ணதாசன், தனது சகாக்களில் ஒருவரிடம் “அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது என்று தெரியவில்லை. அதில் பல்லவி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் அனுபல்லவியும், சரணமும் மிக சுமாராக இருந்தது. இந்த பாடலை எழுதியவர் ஒரு புது பாடலாசிரியராகத்தான் இருந்திருப்பார். இவ்வளவு அழகாக பல்லவி எழுதிய அந்த கவிஞர், இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தாலும் அந்த பாடலை இன்னும் தரமானதான எழுதியிருக்கலாம்.
‘மலரை பறித்தாய் தலையில் வைத்தாய், மனதை பறித்தாய் எங்கே வைத்தாய்’ என்று கதாநாயகன் கேட்க அதற்கு அந்த பெண் என்ன பதில் சொல்லியிக்கவேண்டும் தெரியுமா? ‘மனதை கொடுத்தே மலரை பறித்தேன்’ என்று பாடியிருக்க வேண்டும், ஆனால் ‘மனதை பறித்தேன் உயிரில் வைத்தேன்’ என பாடுகிறாள். நான் கூறியது போன்று பல வரிகளை எழுதியிருந்தால் நன்றாக இருந்துருக்குமே” என விளக்கம் கூறினாராம்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் “ஏன் கவிஞரே, யாரோ எழுதுன பாட்டுக்கு நீங்க இவ்வளவு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே” என கேட்க அதற்கு கண்ணதாசன் “அந்த பாடலை எழுதியது எவ்வளவு நல்ல கவிஞராக இருந்தாலும், அவர் சினிமாவுக்கு புது ஆளாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் சினிமாவின் சூழ்நிலை அவரை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கும். அது போக அந்த இசையமைப்பாளர் போட்ட ராகத்துக்கு வரிகள் உட்காரவேண்டும் என்ற நிர்பந்தமும் இருந்துருக்கும். ஆதலால்தான் இசையமைப்பாளர் ஓகே என்று சொன்னால் போதும் என்பதற்காக பாடல் எழுதியிருப்பார். நான் கூட சினிமாவில் எழுத வந்தபோது இந்த கஷ்டத்தை அனுபவித்திருக்கிறேன்” எனவும் கூறினாராம்.
அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த பாடல் எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது என்பது குறித்து கண்ணதாசனின் உதவியாளர் தேடலில் இருந்தாராம். ஒரு நாள் அப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை குறித்த தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது. அதனை கண்ணதாசனிடம் சென்று கூறினாராம்.
அதாவது அந்த பாடல் “செங்கமலத் தீவு” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாம். அந்த பாடலை எழுதியது திருச்சி தியாகராஜன் என்ற ஒரு கவிஞர். ஆனால் அது தான் அவர் எழுதிய முதல் சினிமா பாடல். இந்த தகவலை கண்ணதாசனிடம் கூறியபோது “நான் சொன்னேன் அல்லவா, அந்த கவிஞர் மிகவும் நல்ல கவிஞராக இருந்தாலும் இதுதான் அவரது முதல் பாடலாக இருக்கும் என்று. அது சரியாக இருக்கிறது பார்” என்று கூறினாராம்.