ஒரே எழுத்தால் பொருளே மாறிவிட்டதே!... சிவாஜி படத்தில் வார்த்தைகளில் விளையாடிய கவியரசர்..
கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் காலம் கடந்து நிற்கக் காரணம் அவரது சொல்வளம் தான். ஒரு சில பாடல்கள் விமர்சனத்திற்குள்ளாகியும் உள்ளது. அந்த வகையில் ஒரு வித்தியாசமான பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். பார்க்கலாமா...
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்று பாகப்பிரிவினையில் ஒரு பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்தப் பாடலைப் பார்த்தால், தங்கத்தில் குறையிருந்தால் எப்படி தரம் குறையாமல் இருக்கும் என்று கேள்வி எழும். ஆனால் கண்ணதாசன் அப்படி எழுதவில்லை. அப்படி என்றால் அவர் என்ன கண்ணோட்டத்தில் எழுதினார் என்பதையும் பார்ப்போம்.
பாகப்பிரிவினை படத்தில் இருந்துதான் சிவாஜியும், கண்ணதாசனும் மீண்டும் சேர்ந்தார்கள். படத்தின் கதையை சிவாஜி வீட்டுக்குச் சென்று சொல்ல போகிறார்கள் இயக்குனர் பீம்சிங்கும், குழுவினர்களும். அப்போது அந்தப் படத்தின் கதையைக் கேட்கிறார் சிவாஜி. எல்லோருக்கும் காபி தயார் செய்து கொடுக்கிறார். அறைக்குள் சென்றவர் மீண்டும் அந்தப் படத்தில் வரும் கண்ணையா என்ற கேரக்டராகவே மாற்றுத்திறனாளியாக வந்து நிற்கிறார்.
கதையின் மேல் உள்ள ஈர்ப்பால் அப்படி மாறி விடுகிறார். வந்திருந்த எல்லோருக்கும் ஆச்சரியம். படத்தில் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் நடிகை சரோஜாதேவியும் செமயாக நடித்திருப்பார். இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். இது ஒரு காதல் பாட்டு. கணவர் மேல் உள்ள பிரியமும், இரக்கமும் சேர்ந்த பாடல். பி.சுசீலா வெகு அழகாகப் பாடியிருப்பார். தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ. உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?
இதே பாடலில் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ? என்ன ஒரு அற்புதமான சிந்தனை என்று பாருங்கள். அதே போல கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையோ? இரு கைகள் இல்லாமல் மலர்கள் அணைத்துக் காதல் தரவில்லையா? அப்படி ஒரு அழகான வரிகளைக் கவிஞர் போட்டு இருப்பார்.
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் என்றால் அது 24 கேரட் சுத்த தங்கம் என்பார்கள். அதில் குறையிருந்தால் என்று பொருள். அதே போல் தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் என்றால் 1 பவுன் தங்கம் என்பது 8 கிராம். அதில் ஒரு கிராம் குறைந்தால் என்ன சொல்வார்கள்? தங்கம் குறைவானாலும் தங்கம் தானே. அதில் கிராம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் தங்கத்தின் மதிப்பில் குறை வராது. ஆங்கிலத்தில் இதை இப்படி சொல்வார்கள். தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் என்றால் அது குவாலிட்டி.
தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் என்றால் அது குவாண்டிட்டி. கவியரசர் இங்கு சொன்னது குவாண்டிட்டி தான். அதனால் தான் தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் என்று தான் எழுத வந்துள்ளார். ஆனால் எங்கோ அது மாறி விட்டது. அதனால் பாடலை பாடும்போது குவாலிட்டியாக்கி விட்டார்கள். அதனால் தான் இப்படி ஒரு விமர்சனம் பாடலுக்கு வந்தது. எப்படி இருந்தாலும் இது ஒரு சுகமான பாடல் தான். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.