பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’!.. கண்ணதாசன் சொன்ன அருமையான யோசனை..
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்த நடிகர் யாரென்றால் அது மக்கள்திலகம் எம்ஜிஆர் தான். மக்கள் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பு, பற்று இன்றளவும் யாரும் அதை பறிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அதிகமான மக்கள் செல்வாக்கு கொண்டவராக விளங்கினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் இயக்கி தயாரித்து நடித்து வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்த படம் 1973 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். இந்த படத்திற்காக எம்ஜிஆர் கண்ணதாசனை பாடல் எழுத தன்னுடைய அலுவலகத்திற்கு வரச்சொன்னார்.
கண்ணதாசனும் அங்கு போக ஏற்கெனவே குன்னக்குடி வைத்திய நாதன் இசைக்கருவிகளுடம் அங்கு காத்திருந்தார். கண்ணதாசன் வந்ததும் எம்ஜிஆர் படத்தின் கதையை கூறி ட்யூன் போடச் சொல்லியிருக்கிறார் வைத்தியநாதனை. அவரும் போட கண்ணதாசனை பல்லவி பாடச் சொல்லியிருக்கிறார்.
எம்ஜிஆர் கேட்கிறார் என்பதற்காக இவரும் இரண்டு வரிகளில் பல்லவியை பாட எம்ஜிஆருக்கு பிடித்து விட்டது. அதன் பின் சரணத்தை எழுதிவிட்டு நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு கண்ணதாசன் கிளம்பிவிட்டாராம். வீட்டிற்கு போனவர் எம்ஜிஆருக்கு தொலைபேசியில் அழைத்து என்னுடைய சிறிய ஆலோசனை தயவு செய்து கேளுங்க என்று கூறியிருக்கிறார்.
என்ன என்று எம்ஜிஆர் கேட்க, நீங்கள் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், அதுவும் ஜப்பான், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் எடுக்கக்கூடிய படமாக இருப்பதால் இசை குன்னக்குடி சரியாக இருக்காது. எம்.எஸ்.வியை போடுங்கள் சரியாக இருக்கும் என்று கூற எம்ஜிஆரும் அப்படியா என்று போனை வைத்து விட்டாராம்.
அதன் பின் எம்ஜிஆரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்க சுற்றி இருந்தவர்கள் கண்ணதாசனை கேலி செய்திருக்கின்றனர். பேசாமல் போனோமா பாடல் தந்தோமா என்று இல்லாமல் அறிவுரை என்று சொல்லி இப்பொழுது அந்த படத்தில் இருந்து கண்ணதாசன் நீக்கப்பட்டார் என்று பலபேர் பேசியிருக்கின்றனர்.
அதன் பின் சரியாக ஒன்றரை மாதங்கள் கழித்து எம்ஜிஆரிடம் இருந்து அழைப்பு வர கவிஞர் அங்கு போக எம்ஜிஆர் கண்ணதாசனிடம் தாங்கள் சொன்னதுதான் சரி, என்று எம்.எஸ்.வி இசையில் பாடல் உருவானது. மேலும் படமும் பல இடர்பாடுகளை தாண்டி வெளிவந்தது. அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தன்னை நம்பி வந்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு தான் நடித்த இன்னொரு படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.