கரணம் தப்பினால் மரணம்… வேகமாக வந்த ரயில்… கனநொடியில் தப்பிய நவரச நாயகன்…

Published on: December 31, 2022
Karthik
---Advertisement---

நவரச நாயகன் என்று புகழப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து “ஆகாய கங்கை”, “அக்னி நட்சத்திரம்”, “மௌன ராகம்”, “சோலைக்குயில்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். மேலும் தமிழ் சினிமாவின் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம் வந்தார் கார்த்திக்.

Karthik
Karthik

கார்த்திக் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைக்கமாட்டார் எனவும், மிகவும் தாமதமாக படப்பிடிப்பிற்கு வருவார் எனவும் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. எனினும் கார்த்திக் மிகச்சிறந்த நடிகர் என பலரும் பாராட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் கார்த்திக், கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் உயிரைக் கொடுத்து நடித்த காட்சியை குறித்து தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Anantha Poongatre
Anantha Poongatre

1999 ஆம் ஆண்டு கார்த்திக், அஜித்குமார், மீனா ஆகியோரின் நடிப்பில் ராஜ் கபூர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ஆனந்த பூங்காற்றே”. இத்திரைப்படத்தில் கார்த்திக் ரயில்வே டிராக்கில் இருக்கும் குழந்தையை காப்பாற்றுவது போல் ஒரு காட்சி இருந்தது.

இந்த காட்சியை படமாக்கியபோது ஒரு நிஜ ரயிலையே படப்பிடிப்பிற்காக பயன்படுத்தினார்களாம். ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்த குழந்தையை (டம்மி பொம்மை) தனது கையால் தூக்கிய கார்த்திக், ரயில் அருகில் நெருங்கி வரும் நேரத்தில் ஒரு நொடியில் தண்டவாளத்தில் இருந்து வெளியே குதித்தாராம். கொஞ்சம் வினாடிகள் தவறி இருந்தால் கூட கார்த்திக்கின் உயிருக்கே பங்கம் வந்திருக்குமாம். கார்த்திக்கின் அர்ப்பணிப்பை பார்த்த படக்குழுவினர் இந்த காட்சியை எடுத்து முடித்த பிறகு அவரை புகழ்ந்து தள்ளினார்களாம்.