தூத்துக்குடியில் தமிழாசிரியர்... கவிஞரின் காதல் வரிகளில் இதயத்தை பறிகொடுத்து முத்தமிட்ட எம்ஜிஆர்...!
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது அரசவைக் கவிஞராக இருந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. இவர் கோவை மாவட்டம் பள்பாளையத்தில் உள்ள பஞ்சாலையில் பணியாற்றினார். பேரூர் தமிழ்க்கல்லூரியில் படித்த இவர் 1961ல் புலவர் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். அப்போதே இவருக்குத் திரைப்படத்தில் பாட்டு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது. கோவை முனிசிபல் பள்ளியில் பணியாற்றினார். அப்போது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்புரையாற்றினார்.
அப்போது அதில் கலந்து கொண்ட இயக்குனர் கே.சங்கர் கவிஞரின் பேச்சைக் கேட்டு அவரை வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து சென்னைக்கு வந்தார் புலமைப்பித்தன். அங்குள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது சினிமாவில் பாட்டு எழுத வாய்ப்பு தேடி அலைந்தார்.
அந்த சமயத்தில் தான் அதாவது 1968ல் இயக்குனர் கே.சங்கர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தை இயக்கி வந்தார். அந்தப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பை கவிஞருக்குக் கொடுத்தார்.
அப்போது உருவானது தான் நான் யார் நான் யார் நான் யார்? என்ற பாடல். எம்ஜிஆரின் நடிப்பில் ரசிகர்களை சுண்டி இழுத்த பாடல் அது. அப்போதே இந்தப் பாடலை யார் எழுதினார் என்ற தேடல் தொடங்கிவிட்டது.
ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அடிமைப்பெண், நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி என எம்ஜிஆர் படங்களுக்குப் பாடல்களை எழுதி அசத்தினார். இதனால் அவரது பிடித்த கவிஞர்களில் ஒருவராக புலமைப்பித்தன் மாறினார்.
எம்ஜிஆர் அவருக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார். தொடர்ந்து மேலவைத் துணைத்தலைவராகவும் இருந்து வந்தார்.
2001ல் ஜெயலலிதா கட்சியின் அவைத்தலைவராக இருந்த காளிமுத்துவை சபாநாயகராக்கினார். அதே நேரம் அவைத்தலைவர் பொறுப்புக்கு கவிஞர் புலமைப்பித்தனையே தேர்வு செய்தார்.
1975ல் வெளியான இதயக்கனி படத்தில் நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலை எழுதி பட்டி தொட்டி எங்கும் பேர் வாங்கினார். 1984ல் எம்ஜிஆர் உடல்நிலை குறைவால் நியூயார்க் நகருக்குச் சென்றார். அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இந்தப் பாடலைத் தான் ஒலிக்கச் செய்தனர்.
அடிமைப்பெண் படத்துக்காக புலமைப்பித்தனை எம்ஜிஆர் பாட்டு எழுதச் சொன்னார். அந்தப்பாடலின் தொடக்க வரிகளாக ஆயிரம் நிலவே வா என்ற வரிகளை எம்ஜிஆர் எழுதினார். உடனே சரணத்தை புலமைப்பித்தனை எழுதச் சொல்லிவிட்டு அவர் அருகில் உட்கார்ந்து கொண்டார்.
மன்னவனின் தோளிரண்டை...
மங்கையெந்தன் கைதழுவ...
கார்குழலும் பாய்விரிக்கும்...
கண்சிவந்து வாய்வெளுக்கும்...!
என்று எழுதினார் புலமைப்பித்தன்.
அவரல்லவா...கவிஞர்..! என்று வியக்கும் அளவிற்கு அந்த வரிகள் இருந்தன. அதற்கு எம்ஜிஆரும் விதிவிலக்கல்ல. அந்த தேனினும் இனிய தெவிட்டாத வரிகளில் மயங்கியே போனார் எம்ஜிஆர். உடனே சட்டென்று கவிஞரின் விரலைப் பிடித்து முத்தமிட்டார்.
அடுத்து 3வது சரணத்தை எழுதுங்கள். ஏதாவது நீர்நிலையில் வைத்துப் படமாக்கலாம் என்றார். அப்போது கவிஞர் எழுதினார்.
பொய்கையெனும் நீர்மகளும்,
பூவாடை போர்த்திருந்தால்...
தென்றலெனும் காதலனின்
கைவிலக்க வேர்த்து நின்றாள்...!
என்னே இனிமை
கவிஞரின் கைவண்ணத்தில் உருவான அந்தப் பாடல் என்றே அனைவரது விழிகளையும் ஆச்சரியத்தில் உறையச் செய்தது. இந்தப்பாடலை இப்போது கேட்டாலம் நம்மையும் அறியாமல் அதில் லயித்து விடும் நம் மனது.