தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த இளம் நடிகை... ஆனால் தமிழில் அல்ல....

by ராம் சுதன் |
keerthi suresh
X

திரையுலகில் வலம் வரும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு படங்களை சொந்தமாக தயாரித்தும் வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலமும், நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலமும், நடிகர் விஷால் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலமும், நடிகை நயன்தாரா ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமும் படங்களை தயாரித்து வருகிறார்கள்.

தற்போது இந்த வரிசையில் ஒரு இளம் நடிகை இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

keerthi-suresh

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் அவர் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை அவரே தயாரிக்க உள்ளாராம். இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி விஷ்ணு ஜி ராகவ் இயக்கத்தில் உருவாக உள்ள வாஷி என்ற புதிய மலையாள படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து சொந்தமாக தயாரிக்க உள்ளார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பட்டா, மலையாளத்தில் மோகன் லாலுடன் மரைக்காயர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் திடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கீர்த்தியின் தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் தற்போது கீர்த்தியும் தயாரிப்பில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ படம் நல்லா இருந்தா சரிதான்.......

Next Story