தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்.....
தமிழ்சினிமாவிற்கு பிற மாநிலத்தில் இருந்து நடிகைகள் நிறைய பேர் அவ்வப்போது வருவதுண்டு. அந்தந்த காலகட்டங்களில் அவரவர்கள் தனக்கு வரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வி;ட்டு சென்று விடுவார்கள். நடிகர்கள் அப்படியில்லை. தேவைப்படும்போது வருவார்கள்.
ரசிகர்களைக் கவர்வார்கள். படத்தை வெற்றிப்படமாக்குவார்கள். அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தமிழ்சினிமாவிற்கு நடிகைகளும் சரி. நடிகர்களும் சரி. நிறைய பேர் படையெடுத்துள்ளனர். இங்கு நாம் நடிகர்களைப் பற்றி பார்ப்போம்.
மம்முட்டி
கேரள சூப்பர்ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் மம்முட்டி. இவர் நடித்த படங்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் தான். இவர் பேசும் தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். கிளி பேச்சு கேட்கவா, அழகன், அரசியல், தளபதி, புதையல், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாதா சாஹேப் அம்பேத்கார், பழசிராஜா ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
3 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இவர் நீண்டகாலமாக பரிச்சயமானவர் என்பதால் தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி மவுசு எப்போதும் உண்டு. பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால்
இவரது இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். மம்முட்டியை அடுத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மோகன்லால். தமிழ் சினிமாவில் இவர் மணிரத்னத்தின் இருவர் படத்தில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
கமலுடன் நடித்த உன்னைப் போல் ஒருவன் படம் அனைத்துத் தரப்பினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இளைய தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ஜில்லா படமும் மாஸானது. அப்புறம் புலி முருகன் என்ற படம் ரசிக்கும்படியாக இருந்தது. மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தில் நடித்து அசத்தினார்.
ஜெயராம்
மலையாள பட உலகில் வெற்றி வாகை சூடி தமிழ்சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ஜெயராம். இவர் ஆரம்பத்தில் முறை மாமன், புருஷலட்சணம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தார். இவர் கமலின் நெருங்கிய நண்பர்.
கமலுடன் இணைந்து தெனாலி என்ற நகைச்சுவைப்படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
இதுதவிர அன்புள்ள கமல், நளதமயந்தி, பஞ்சதந்திரம் ஆகிய படங்களிலும் கமலுடன் நடித்துள்ளார். அஜீத்துடன் ஏகன், விஜய் உடன் துப்பாக்கி, கலைஞரின் கைவண்ணத்தில் உருவான பொன்னர் சங்கர், 2020ல் வெளியான புத்தம்புது காலை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
பிருத்விராஜ்
பிருத்வி ராஜ் சுகுமாரன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்சினிமா ரசிகர்களால் மென்மையான கதாநாயகனாக அறியப்பட்டார். நடிகர், தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
நரேன்
சித்திரம் பேசுதடி என்ற படத்தில் 2006ல் நடித்து தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டார்.இ அதன்பின், பள்ளிக்கூடம், அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்து வெற்றி வாகை சூடினார். இவருக்கு சொந்த ஊர் கொல்கத்தா. என்றாலும் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மலையாளத்திலும் பல வெற்றிப்படங்களைத் தந்தவர் என்பதால் இவரை கேரள நடிகர் என்றே குறிப்பிடலாம்.
துல்கர் சல்மான்
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தமிழ்சினிமாவில் வாயை மூடி பேசவும் படத்தில் அறிமுகம் ஆனார். ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தீரம், நடிகையர் திலகம், காற்று வெளியிடை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திலகன்
தமிழ்சினிமாவில் கேரளாவில் இருந்து வில்லன் நடிகராக வந்து அசத்தியவர். விஜயகாந்துடன் இவர் இணைந்து நடித்து மிரட்டிய படம் சத்ரியன். படத்தைப் பார்க்க பார்க்க இவரது வில்லத்தனமான நடிப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
அவ்வளவு அழகான தமிழ் இவரது காந்த குரல் கம்பீரம் என பல தனிச்சிறப்பம்சங்களை உடையவர். தமிழ்சினிமாவில் மேட்டுக்குடி, நீ வேணும்டா செல்லம், அலிபாபா, வில்லன், ஆயுத பூஜை, பாலா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.