ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அப்பாவைப் போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் 2015ம் வருடம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. அப்பாவுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படம் துவங்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டிராப்பானது.
அதன்பின் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்கிற படம் உருவானது. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்கள் நடந்தது. அப்படி வெளியான அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் வெளியானது.
இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் கண்டிப்பாக சண்முக பாண்டியனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொம்பு சீவி திரைப்படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 1.69 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை கேட்டபோது சண்முகபாண்டியனுக்கு நடிக்க விருப்பம் இல்லையாம். ஆனால் அம்மா பிரேமலதாதான் ‘நாம் இதுவரை கேட்ட கதைகளில் இந்த கதைதான் நன்றாக இருக்கிறது’ என சொல்லி இருக்கிறார். மேலும் சண்முக பாண்டியனின் மாமா சதீஷும் வற்புறுத்தவே இந்த படத்தில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன்.
ஒருபக்கம் படம் 7 கோடி பட்ஜெட் என சொல்லப்பட்டு உருவான படத்தில் போக போக பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. எனவே பல நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறார்கள். படம் முடியும் போது 20 கோடி வரை செலவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவ்வளவு செலவு செய்து இந்த படத்தை எடுக்க வேண்டுமா என்ற தயாரிப்பாளரும் யோசிக்க, பிரேமலதா, சதீஷ் ஆகியோர் பின்னணியில் இருந்து பண உதவிகள் செய்ய படம் முடிந்து வெளியானதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்படி வெளியான படம் ஃபிளாப் ஆகிவிட்டதால் இனிமேல் அம்மா, மாமா தலையீடு இல்லாமல் தானே கவனமாக கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முடிவெடுத்திருக்கிறாராம் சண்முக பாண்டியன்.
