ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நயன்தாரா படம்....
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு படங்களை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து சுமார் 14 படங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் காமெடி நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மண்டேலா படமும் இடம்பெற்றுள்ளது.
தமிழில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே தமிழ் படம் மண்டேலா படமாக இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கூழாங்கல் என்ற படத்தை ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்துள்ளார்கள்.
இந்த படம் இன்னும் வெளியாகவில்லை இருப்பினும் ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவுக்கு போட்டியிட்டு விருதை வென்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதேபோல் உக்ரைனில் நடந்த மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட கூழாங்கல் படம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வினோத் ராஜா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி உள்ள கூழாங்கல் படம் வெளியாகும் முன்பே இத்தனை விருதுகளை குவித்துள்ள நிலையில், நிச்சயம் ஆஸ்கார் விருதையும் வெல்லும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதுதவிர திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிரேட் நியூஸ். எனக்கு நம்பிக்கை இருக்கிறது கூழாங்கல் ஆஸ்கர் வெல்லும். பிரார்த்தனை செய்கிறேன்" என வாழ்த்தியுள்ளார்.