Cinema History
விஜய் பட இயக்குனரிடம் சவால் விட்டு ஜெயித்த கோவை சரளா!.. சும்மா சொல்லி அடிச்சிருக்காங்களே!..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், காமெடி நடிகைகளின் என்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். மனோரமாவுக்கு பின் தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்களில் கலக்கியவர்தான் கோவை சரளா. 80களில் இருந்து நடித்து வருகிறார்.
துவக்கத்தில் கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரோடு பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அவருக்கு பெரிய பிளஸ் அவரின் குரல்தான். சத்தியராஜ், மணி வண்ணன் வரிசையில் கோவையை சேர்ந்தவர் என்பதால் அந்த கொங்குநாட்டு மொழியை அழகாக பேசி நடிக்கும் நடிகை இவர்.
துவக்கத்தில் சில படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்த கோவை சரளா ஒரு கட்டத்தில் காமெடி வேடத்திற்கு மாறினார். 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வரும் நடிகை இவர். கவுண்டமணி சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டபின் வடிவேலு, விவேக் ஆகியோருடன் சேர்ந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
குறிப்பாக வடிவேலுவுக்கு மனைவியாக நடித்த சில படங்களில் அவரை புரட்டி எடுக்கும் வேடங்களில் கோவை சரளா நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்போதுள்ள எல்லா நடிகர்களின் படங்களிலும் சரளா நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனின் அம்மாவாக குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார்.
விஜய் நடித்து 2001ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விவேக் – கோவை சரளாவின் காமெடி அமைந்தது. பிச்சைக்காரியாக இருக்கும் சரளாவுடன், விவேக்குக்கு கனெக்ஷன் ஏற்பட்டு அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி இருப்பார்கள்.
ஒரு காட்சியில் அலைபாயுதே படத்தில் இடம் பெற்ற ‘சினேகிதனே சினேகிதனே’ பாடலை விவேக்கை பார்த்து கோவை சரளா தனது ஸ்டைலில் பாடி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். இந்த காட்சியை எடுக்கும்போது அப்படத்தின் இயக்குனர் ‘இது எவ்வளவு நல்ல பாட்டு. இத இப்படி பாடுறீங்களே’ என கேட்டிருக்கிறார்.
அதற்கு ‘சார் இந்த சீன் செம ஹிட் அடிக்கும். தியேட்டர்ல பாருங்க. இல்லனா இந்த காட்சி எடுக்க எவ்வளவு செலவு ஆச்சோ. அதை நான் கொடுத்துடுறேன்’ என சொல்லி இருக்கிறார் கோவை சரளா. அவர் கணித்து சொன்னது போலவே அந்த காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.