பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு கோவை சரளா செய்த காரியம்… எம்.ஜி.ஆரிடம் வசமாக சிக்கிக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம்…
கோவை சரளா
தமிழ் சினிமாவில் பெண் நகைச்சுவை நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு மிகவும் சொற்பமாக காணப்படும் நகைச்சுவை நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கோவை சரளா.
கோவை சரளா, தமிழில் “வெள்ளி சக்கரம்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “முந்தானை முடிச்சு”, “வைதேகி காத்திருந்தால்” போன்ற பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கோவை சரளா, நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் பின்னி பெடலெடுத்தார். குறிப்பாக வடிவேலு-கோவை சரளா காம்போவை நம்மால் மறக்கவே முடியாது.
கோவை சரளா தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அதே போல் கோவை சரளா ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையும் கூட. சமீபத்தில் வெளியான “செம்பி” திரைப்படத்தில் கோவை சரளா முன்னணி கதாப்பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
5 மணிக்கே எம்.ஜி.ஆரை சந்திக்க ஓடிய கோவை சரளா
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கோவை சரளா, தான் எம்.ஜி.ஆரை சந்தித்தது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
அதாவது கோவை சரளா சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகையாக இருந்தாராம். கோவை சரளா 6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரது சொந்த ஊரான கோவைக்கு கட்சி வேலையாக எம்.ஜி.ஆர் வந்திருந்தாராம். அவரை பார்ப்பதற்கு பலரும் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தார்களாம்.
கோவை சரளாவும் பள்ளிக்கு செல்வதை தவிர்த்துவிட்டு காலை 5 மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆரை பார்ப்பதற்கு ஆவலாக அந்த ஹோட்டலுக்கு வெளியே நின்றுவிடுவாராம். ஆனால் பள்ளிக்கு செல்வது போல் பள்ளி சீருடையை அணிந்துகொண்டுதான் செல்வாராம்.
கோவை சரளாவுக்கு ஷாக் கொடுத்த எம்.ஜி.ஆர்
இவ்வாறு தினமும் போய்க்கொண்டிருந்தாராம். எம்.ஜி.ஆர் பள்ளி சீருடையுடன் ஒரு பெண் தினமும் நிற்பதை அவரது அறையில் இருக்கும் ஜன்னலின் வழியே கவனித்து கொண்டே இருந்தாராம். ஒரு நாள் எம்.ஜி.ஆர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்தபோது கோவை சரளாவை அழைத்தாராம்.
கோவை சரளாவுக்கு தன்னைத்தான் எம்.ஜி.ஆர் அழைக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லையாம். உடனே எம்.ஜி.ஆரின் அருகே ஓடிச்சென்றிருக்கிறார் கோவை சரளா.
“என்ன தினமும் இங்க வந்து நின்னுட்டு இருக்க. என்ன விஷயம்?” என கேட்டாராம். அதற்கு கோவை சரளா, “எல்லாம் உங்களை பார்க்கத்தான் சார்” என கூறியிருக்கிறார். அதன் பின் கோவை சரளாவின் படிப்பை குறித்தும் குடும்பத்தை குறித்தும் விசாரித்தாராம் எம்.ஜி.ஆர். அதன் பின் எம்.ஜி.ஆரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாராம் கோவை சரளா. இவ்வாறு கோவை சரளா, எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தது குறித்து அந்த பேட்டியில் மிகவும் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்துக்கும் மோகன்ஜிக்கும் போட்டி?… ஓப்பனாக போட்டுடைத்த சர்ச்சை தயாரிப்பாளர்…