எம்ஜிஆர் ரசிகர்களால் தாக்கப்பட்ட பிரபல இயக்குனர்!..வெள்ளிவிழா கொண்டாட போனவருக்கு நேர்ந்த சோகம்!..
தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனராக மிகவும் பிரபலமாக இருந்தவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த படம் ‘பணமா பாசமா’. இந்த படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். மிகவும் பிரபலம் வாய்ந்த பாடலான இழந்த பழம் பாடல் கூட இந்த படத்தில் அமைந்த பாடலாகும். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது.
இந்த வெற்றியை கொண்டாட மதுரை தங்கம் தியேட்டரில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான ரசிகர்கள் சூழ மேடையில் பேசினார் கோபாலகிருஷ்ணன். அப்போது அவர் என் படத்துக்கு நிகர் என் படமே என்றும் வேறு எந்த படமும் இருக்காது என்றும் எப்பேற்பட்ட வசூல் சக்கரவர்த்தியாக இருந்தாலும் இணையாக நிற்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பேசி முடித்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் அவர் காரை தேடியிருக்கிறார். ஆனால் கார் எம்ஜிஆர் ரசிகர்களால் சூறையாடப்பட்டிருக்கிறது. அடித்து நொறுக்கியிருக்கின்றனர். உடனே இவர் இங்கிருந்தால் இவருக்கும் ஆபத்து ஏற்படும் என கருதி தியேட்டர் மேனேஜர் அவரை உடனடியாக சென்னைக்கு வேறொரு காரில் அனுப்பி வைத்திருக்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் தவித்த கோபாலகிருஷ்ணன் அப்போதைய முதலமைச்சராக இருந்த அண்ணாவிடம் போய் நடந்த நிலவரத்தை சொல்லி இதற்கு நீங்கள் ஒரு வழி கூற வேண்டும் என முறையிட்டிருக்கிறார்.
ஆனால் அண்ணாவோ அமைதியாக இருக்க வேறுவழியில்லாமல் திரும்பி வந்துவிட்டார் கோபாலகிருஷ்ணன். அண்ணா அமைதியாக இருப்பதற்கு காரணம் நான் காங்கிரஸ், அவர் திமுக இதனால் கூட இருக்கலாமோ என்ற குழப்பத்திலேயே இருந்த கோபாலகிருஷ்ணன் குற்றாலத்திற்கு சென்றிருக்கிறார். அவரை பின் தொடர்ந்து இரண்டு தடியான ஆட்கள் வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களை பார்த்த கோபாலகிருஷ்ணனுக்கோ எம்ஜிஆர் ரசிகர்கள் தான் தன்னை அடிக்க வந்திருக்கின்றனர் என நினைத்து வேகமாக வர மறுபடியும் பின் தொடர்ந்த அவர்கள் விபரத்தை கூறியிருக்கின்றனர்.
நாங்கள் மஃப்டி போலீஸ். முதலமைச்சர் தான் உங்கள் பாதுகாப்பு கருதி பின் தொடர சொன்னார் என அவர்கள் கூறியதும் அண்ணாவை பற்றி நாம் நினைத்தது தவறு என கருதி சென்னைக்கு போய் அண்ணாவை சந்தித்த கோபாலகிருஷ்ணன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அண்ணா கோபாலகிருஷ்ணனிடம் ‘நாளைக்கு பத்திர்க்கையில் நான் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் இயக்க போகிறேன் என்று ஒரு அறிக்கையை விடு, மற்றவை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிய அண்ணாவின் யோசனையை ஏற்று அறிக்கை விட்டிருக்கிறார். அவ்ளோதான் எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த அறிக்கையை பார்த்ததும் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். அதன் பின் எம்ஜிஆர்-கோபாலகிருஷ்ணன் கூட்டணியில் படம் தயாரானதா என்பது வேறொரு கதை. இந்த செய்தியை பட்டிமன்ற பேச்சாளரும் ஊக்கமூட்டும் பேச்சாளரருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி என்பவர் தெரிவித்தார்.