முடங்கிப் போன ஜக்குபாய்… சந்திரமுகியை விட்டுக்கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்… பெருந்தன்மையை பாருங்கப்பா!!

Published on: October 29, 2022
KS Ravikumar
---Advertisement---

கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்த்தை வைத்து ஜக்குபாய் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். ரஜினிகாந்த் நடித்த “பாபா” திரைப்படம் தோல்வி அடைந்ததால், நிச்சயமாக அடுத்து ஒரு வெற்றித் திரைப்படம் கொடுத்தே ஆகவேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தார்.

Jaggubhai
Jaggubhai

ஆனால் “ஜக்குபாய்” திரைப்படத்தின் இரண்டாம் பாதி “பாட்ஷா” கதை போல் இருந்ததாக ரஜினிகாந்த் எண்ணினாராம். ஆதலால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இதனிடையே ரஜினிகாந்த் பெங்களூரில் கன்னடத்தில் வெளிவந்த “ஆப்தமித்ரா” என்ற திரைப்படத்தை பார்த்திருக்கிறார்.

Apthamithra
Apthamithra

(“ஆப்தமித்ரா” திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த “மணிச்சித்ரதாழு” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதே போல் “சந்திரமுகி” திரைப்படமும் இத்திரைப்படத்தின் ரீமேக்தான்)

உடனே கே.எஸ்.ரவிக்குமாரை தொடர்புகொண்டு “ஆப்தமித்ரா” திரைப்படத்தின் ஒரிஜினலான “மணிச்சித்ரதாழு” திரைப்படத்தை பார்க்குமாறு கூறினார். அத்திரைப்படத்தை பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் “படம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஹீரோ இரண்டாம் பாதியில்தானே வருகிறார். இந்த கதை உங்களுக்கு செட் ஆகுமா?” என கேட்டிருக்கிறார்.

Manichitrathazhu
Manichitrathazhu

உடனே கே.எஸ்.ரவிக்குமாரை பெங்களூருக்கு அழைத்த ரஜினிகாந்த், “ஆப்தமித்ரா” திரைப்படத்தை பார்க்குமாறு கூறினார். “ஆப்தமித்ரா” திரைப்படத்தில் அதன் ஒரிஜினலான “மணிச்சித்ரதாழு” திரைப்படத்திலிருந்து கன்னடத்திற்கு ஏற்றார் போல் கொஞ்சம் திரைக்கதையை மாற்றி இருந்தார்கள். ஆதலால் அதில் ஹீரோ திரைப்படத்தின் தொடக்கத்திலேயே வந்துவிடுவார்.

KS Ravikumar
KS Ravikumar

“ஆப்தமித்ரா” திரைப்படத்தை முழுவதும் பார்த்து முடித்த கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த்திடம் “இத்திரைப்படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். “ஆப்தமித்ரா” திரைப்படத்தை இயக்கியவர் பி.வாசு.

P.Vasu
P.Vasu

இந்த நிலையில் ரஜினிகாந்த், “ஆப்தமித்ரா திரைப்படத்தை ரீமேக் செய்யலாம், நீங்களே அத்திரைப்படத்தை இயக்குங்கள்” என கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினாராம். ஆனால் அதற்கு ரவிக்குமார் “பி.வாசு உங்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஆப்தமித்ரா திரைப்படத்தை இயக்கியது கூட பி.வாசுதான். ஆதலால் பி.வாசுவே இயக்கினால் நன்றாக இருக்கும்” என ரஜினியிடம் கூறிவிட்டாராம். அதன் பிறகுதான் பி.வாசு “ஆப்தமித்ரா” திரைப்படத்தின் ரீமேக்கான “சந்திரமுகி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Jaggubhai
Jaggubhai

எனினும் கே.எஸ்.ரவிக்குமார் “ஜக்குபாய்” திரைப்படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி எழுதி, சரத்குமாரை வைத்து இயக்கினார். அத்திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.