“சினிமாவே வேண்டாம்”… சொந்த தொழில் தொடங்கிய கே.எஸ்.ரவிக்குமார்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி வெற்றி இயக்குனராக திகழ்ந்தவர். இவர் இயக்கிய திரைப்படங்களில் கம்மெர்சியல் தன்மைகள் எங்கேயும் எல்லை மீறாமல் கச்சிதமாக இருக்கும்.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சரத்குமார், மாதவன், சிம்பு என தமிழின் டாப் நடிகர்களை வைத்து பல வெற்றித் திரைப்படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் தொடக்கத்தில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால் அவர் பணியாற்றிய பல திரைப்படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டதாம். இதனால் வெறுப்பான கே.எஸ்.ரவிக்குமார் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து, சொந்த தொழில் ஒன்றை தொடங்குவதற்கு தனது தந்தையிடம் பணம் கேட்டாராம்.
தந்தையும் ஒப்புக்கொள்ள, ஒரு பிளாஸ்டிக் கம்பெனியை தொடங்கினார் கே.எஸ்.ரவிக்குமார். கம்பெனி திறப்பு விழா நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், இயக்குனர் ராஜேந்திரக்குமார் ,ரவிக்குமாரை சந்திக்க வந்தார். கே.எஸ்.ரவிக்குமாரும் ராஜேந்திரக்குமாரும் ஏற்கனவே பழக்கமானவர்கள்.
“என்னுடைய நண்பர் ஒருவர் புதிதாக படம் இயக்க உள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதை சொல்லி உள்ளார். நீ அவரிடம் அஸோசியேட்டாக பணிபுரிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினார்.
அதற்கு ரவிக்குமார் “நான் இப்போதுதான் சினிமாவே வேண்டாம் என்று எண்ணி, ஒரு புது தொழிலை தொடங்க உள்ளேன். இப்போது வந்து இப்படி கேட்கிறீர்களே” என மறுப்பு தெரிவித்தாராம். ஆனால் ராஜேந்திரக்குமார் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்.
உடனே ரவிக்குமார் “சரி, என் அன்னையிடம் இதற்கு அனுமதி கேட்டு வாருங்கள். அவர் அனுமதித்தால் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன்” என கூறினாராம். உடனே ராஜேந்திரக்குமார், ரவிக்குமாரின் அன்னையிடம் சென்று பேசி அவரை சம்மதிக்க வைத்துவிட்டார். உடனே கே.எஸ்.ரவிக்குமாரும் சரி என ஒப்புக்கொண்டார். இவ்வாறுதான் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் “புது வசந்தம்” திரைப்படத்தில் அஸோசியேட்டாக பணிபுரியத் தொடங்கினார்.
“புது வசந்தம்” திரைப்படத்தை தயாரித்த “சூப்பர் குட் ஃபிலிம்ஸ்” நிறுவனம்தான், கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் திரைப்படமான “புரியாத புதிர்” திரைப்படத்தையும் தயாரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.