Vijayakanth: 90களில் முக்கியமான இயக்குனராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர். ரஜினி, கமல், சரத்குமார், அஜித், விஜய் என எல்லோரையும் வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே வித்தியாசமான முயற்சி. ஆனால், படம் பெரிய வசூலை பெறவில்லை.
எனவே, கமர்ஷியல் ரூட்டுக்கு மாறி சேரன் பாண்டியன் படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அந்த ரூட்டிலேயே பயணிக்க துவங்கினார். சரத்குமாரை வைத்து அதிக படங்களை இயக்கியிருக்கிறார். ஊர் மரியதை உள்ளிட்ட பல படங்களை இயக்கினாலும் நாட்டாமை படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
இந்த படத்தை பார்த்த பின்புதான் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென ரஜினியே ஆசைப்பட்டார். ரஜினியை வைத்து ரவிக்குமார் இயக்கிய முத்து, படையப்பா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் படையப்பா எப்போதும் இருக்கிறது. ரஜினியின் குட் புக்கில் எப்போதும் இருப்பவர் ரவிக்குமார்.
கமலை வைத்து தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், மன்மதன் அம்பு, தசாவதாரம் என 5 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் ரவிக்குமார். சரியாக திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களில் மற்றும் சொன்ன பட்ஜெட்டில் படமெடுத்து கொடுக்கும் இயக்குனர் இவர். இவரை போன்ற இயக்குனர்கள் இப்போது யாருமில்லை என்றே சொல்லவேண்டும்.

கடந்த சில வருடங்களாக இவர் திரைப்படங்களை இயக்குவது இல்லை. ஏனெனில், சினிமாவில் பிஸியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார். விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படம் தர்ம சக்கரம். இந்நிலையில்தான் இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துகொண்டார்.
விஜயகாந்தை வைத்து தர்ம சக்கரம் படத்தை நான் இயக்குவது உறுதியான நேரம் கமல் சார் என்னை அழைத்து ‘அவ்வை சண்முகி படத்தை ஹிந்தியில் சாச்சி 420 என்கிற பெயரில் எடுக்கிறேன். நீங்கள்தான் படத்தை இயக்க வேண்டும்’ எனக்கேட்டார். ஒரு படத்தை ஒப்புக்கொண்ட பின் அதைவிட்டு விட்டு இன்னொரு படத்திற்கு போகும் பழக்கம் எனக்கு இல்லை. எனவே, கமல் சாரிடம் முடியாது என சொல்லிவிட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.