கே எஸ் ரவிக்குமார் சொன்ன இரண்டு கிளைமேக்ஸ்… நோ சொன்ன ரஜினி… படையப்பா குறித்த சுவாரசிய தகவல்…

by Arun Prasad |
கே எஸ் ரவிக்குமார் சொன்ன இரண்டு கிளைமேக்ஸ்… நோ சொன்ன ரஜினி… படையப்பா குறித்த சுவாரசிய தகவல்…
X

1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் “படையப்பா”. இத்திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றுநடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் பெண் வில்லி என்ற பட்டியலில் டாப் லிஸ்ட்டில் இருப்பது நீலாம்பரி தான்.

படையப்பாவான ரஜினிகாந்தை அடையவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கும் நீலாம்பரியையும் அவர்களது குடும்பத்தையும் அவமானப்படுத்திவிடுகிறார் படையப்பாவின் தாய். இதற்காக படையப்பாவை பழிவாங்கவேண்டும் என்று பல வருடங்கள் காத்திருக்கிறாள் நீலாம்பரி. இவ்வாறு கதை சென்றுகொண்டிருக்க கிளைமேக்ஸில் நீலாம்பரியை மாடு முட்டவர படையப்பா தனது கையில் இருக்கும் வேலை எறிந்து நீலாம்பரியை காப்பாற்றிவிடுவார்.

அப்போது நீலாம்பரி படையப்பாவிடம் மன்னிப்பு கேட்பது போல் நடித்து அதன் பின் “இப்படி எல்லாம் உன்கிட்ட மன்னிப்பு கேட்பேன்னு நினைச்சியா, அடுத்த ஜென்மத்துலயாவது உன்னைய நான் பழிவாங்காம விடமாட்டேன்” என கூறிவிட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுவார்.

இந்த காட்சியை ரஜினியிடம் விவரித்த கே எஸ் ரவிக்குமார், இன்னொரு கிளைமேக்ஸ் காட்சியையும் விவரித்து இருக்கிறார். அதாவது நீலாம்பரி படையப்பாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்படியே இறந்துபோவதாக ஒரு கிளைமேக்ஸ் காட்சியை கூறியிருக்கிறார். “இந்த இரண்டு கிளைமேக்ஸையும் எடுத்துவைப்போம். ஒரு வேளை படம் வெளியான பிறகு கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிவிடலாம்” என ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

இந்த இரண்டு கிளைமேக்ஸையும் கேட்ட ரஜினிகாந்த், “ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள். நீலாம்பரி படையப்பாவை அடுத்த ஜென்மத்தில் வந்து பழிவாங்குவேன் என கூறுவது போன்ற கிளைமேக்ஸையே எடுங்கள்” என கூறியுள்ளார்.

அதற்கு கே எஸ் ரவிக்குமார் “அப்படி ஒரு கிளைமேக்ஸ் வைத்தால் நீலாம்பரி என்ற கதாப்பாத்திரம் தான் மாஸாக தெரியும். இதனை உங்கள் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் “எனக்கு அப்படிப்பட்ட ஒரு கிளைமேக்ஸ் தான் வேண்டும்” என கூறியிருக்கிறார்.

ரஜினி கணித்தது போல் அந்த கிளைமேக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராதவிதமாக ஆடியன்ஸை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story