Vijayakanth: நடிகர் விஜயகாந்த் எப்படிப்பட்ட குணம் கொண்டவராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் எளிமையானவர். எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர். அவருக்கு தெரிந்து யாருக்கேனும் கஷ்டம் என்றால் உடனே உதவக்கூடியவர். தன்னால் யாருமே கஷ்டப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். பலருக்கும் உதவும் குணம் கொண்டவர். திரைத்துறையில் பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை உருவாக்கியவர்.
அதனால்தான் அவரை எல்லோரும் கொண்டாடினார்கள். அவரை பற்றி மோசமாக யாருமே விமர்சித்து பேசமாட்டார்கள் என்பதுதான் விஜயகாந்த் வாழ்ந்துவிட்ட போன வாழ்க்கை. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த போது தமிழ்நாடே அவருக்காக வருத்தப்பட்டது. அவர் மரணமடைந்த போது ‘நல்ல மனிதர் இறந்துவிட்டார்’ என தமிழகமே உருகியது.
மதுரையில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்தான் விஜயகாந்த். இவரின் அப்பா ரைஸ் மில்ஸ் வைத்து நடத்தி வந்தார். நல்ல பள்ளியில் படிக்க வைத்தும் விஜயகாந்துக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்படவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்த்துக்கொண்டு ஜாலியாக இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை சென்றார்.

பல அவமானங்களை தாண்டி சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நிறைய வெற்றி தோல்விகளை சந்தித்து படிப்படியாக முன்னேறினார். யாரெல்லாம் இவரை அவமானப்படுத்தினார்களோ அவர்களே கூட விஜயகாந்தின் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் நிலையை உருவாக்கினார். தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாகவும் மாற்றினார்.
அரசியலில் நுழைந்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். உடல் மட்டும் ஒத்துழைத்திருந்தால் தமிழகத்தின் முதல்வராகவும் அவர் மாறியிருப்பார். இந்நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் விஜயகாந்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார்.
நான் விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் தர்ம சக்கரம். அவர் பார்ப்பதற்குதான் கரடுமுரடான மனிதர் போல தெரிவார். ஆனால், அவ்வளவு இளகிய மனசு அவருக்கு. ஷூட்டிங் முடிந்து அவரின் ரூமுக்கு போனால் அவரை பார்க்க அவரின் ரசிகர்கள் காத்திருப்பார்கள். 2 மணி நேரம் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். இதை அவர் தினமும் செய்வார். எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். அவரை போல ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.