குருதிப்புனல் படத்தால் தனுஷ் லைஃப்பில் நடந்த ட்விஸ்ட்... அட இது தெரியாம போச்சே!

துள்ளுவதோ இளமை படத்துல ஆரம்பிச்ச நடிகர் தனுஷோட பயணம் கிரே மேன்னு ஹாலிவுட் வரைக்கும் நீண்டிருக்கு.. நடிகரா தேசிய விருதுகள், சைமா விருதுனு கலக்குற தனுஷோட உண்மையான பெயர் வேற.. அப்புறம் ஏன் தன்னோட பெயரை தனுஷ்னு மாத்திக்கிட்டார்... அதோட சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
இயக்குநர் கஸ்தூரி ராஜாவுடைய மகன்தான் தனுஷ். பள்ளிக்கூட நாட்கள்ல ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சு பெரிய செஃப் ஆகணும்ங்குறதுதான் தனுஷோட லட்சியமா இருந்திருக்கு. ஆனால், அவருடைய மூத்த சகோதரரும் இயக்குநருமான செல்வராகவன் தான் தனுஷ் சினிமாவைத் தேர்ந்தெடுக்கக் காரணம். 2002-ல் தன்னுடைய தந்தை இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் ரிலீஸானபோது, யாருடா இது பென்சில் மாதிரி என்றெல்லாம் கூட உருவ கேலிக்கு உள்ளானார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தார். நடிகராக மட்டுமில்லாமல், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் காட்டும் பல்துறை வித்தகர் நம்ம தனுஷ்.
இவரது குரலில் கடந்த 2011-ல் வெளியான வொய் திஸ் கொலவெறிடி பாடல் இவரை உலகெங்கும் கொண்டு சேர்த்தது. யூடியூபில் 100 மில்லியன் வியூஸ் பெற்ற முதல் இந்திய வீடியோ வொய் திஸ் கொலவெறி டி பாடல்தான். 3 படத்தில் இடம்பெற்றிருந்த அந்தப் பாடலுக்கு இசையமைத்தது அறிமுக இசையமைப்பாளரான அனிருத். அந்தப் படத்தை இயக்கியது தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா. அதன்பிறகு, தனுஷ் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகரானார். வெற்றிமாறனுடன் இணைந்து இவர் கொடுத்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வட சென்னை படங்கள் வேற லெவல் ஹிட்டடித்தன. சமீபத்தில் வெளியான கிரே மேன் படம் மூலம் ஹாலிவுட்டிலும் தனுஷ் கால் பதித்துவிட்டார். ரூஸோ சகோதரர்கள் இயக்கியிருந்த அந்தப் படம் தனுஷூக்கு ஹாலிவுட்டில் முக்கியமான அறிமுகம் கொடுத்திருக்கிறது.
நடிகர் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. சினிமாவுக்குள் வருவதற்கு முன், ஒரு வித்தியாசமான பெயரா நம்மோட பேரை மாத்திக்கணும்னு முடிவு பண்ணியிருக்கிறார். அப்படி, கமலின் குருதிப்புனல் படத்தைப் பார்த்த அவருக்கு, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த தனுஷ் என்கிற கேரக்டரை ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது. எதிரிகள் கேங்கில் உளவு பார்க்கும் தனுஷின் கேரக்டரைப் போலவே, பெயரும் பிடித்துப் போனதாம். இதனால், வெங்கடேஷ் பிரபு என்கிற தனது பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டாராம். அப்பா கஸ்தூரி ராஜா சம்மதத்துடன் தனுஷ் என்கிற பெயரில் சினிமா இண்டஸ்ட்ரியில் அறிமுகமாகி சக்ஸஸ்ஃபுல் நடிகராக வலம் வருகிறார்.