லால் சலாம் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தான்!... கடைசி நிமிடத்தில் ரஜினி எடுத்த அதிரடி முடிவு...
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் "லால் சலாம்". இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் கான் என்ற கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்தது. ஒரு பக்கம் இணையத்தில் "லால் சலாம்" ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக இருப்பதாக பலர் கூறி வந்தாலும், ஒரு சிலர் அந்த போஸ்டரை ட்ரோல் செய்தும் வந்தனர்.
"லால் சலாம்" திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் என கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்த "கை போ சே" திரைப்படத்தின் தழுவல் எனவும் செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், "லால் சலாம்" திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ரஜினி நடிக்கும் மொய்தீன் கான் கதாப்பாத்திரத்திற்கு முதலில் மலையாள நடிகர் மம்முட்டியைத்தான் தேர்வு செய்திருந்தாராம். இத்திரைப்படத்தின் கதையை ஒரு முறை ரஜினியிடம் கூறும்போது, மொய்தீன் கான் கதாப்பாத்திரம் ரஜினிக்கு பிடித்துப்போக, "இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு யாரை தேர்வு செஞ்சிருக்க?" என கேட்டாராம். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மம்முட்டியின் பெயரை கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த், "இந்த கதாப்பாத்திரத்தில் நானே நடிக்கிறேன்" என கூறினாராம். அந்தளவுக்கு மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரமாக மொய்தீன் கான் கதாப்பாத்திரம் அமையவுள்ளது என அப்பேட்டியில் அந்தணன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவருகிறது. "லால் சலாம்" திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், தா.செ.ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜிம்முக்கு போக விரும்பாத சிவாஜிகணேசன்!.. அட இதுதான் காரணமா?..