375 ரூபாய் 50 பைசால என் ஸ்கூல் படிப்ப முடிச்சுட்டேன்.. இப்ப Pre-KGக்கு 2.5 லட்சம் கேக்குறாங்க... சிவகுமார் பேச்சு..!
சூர்யா, கார்த்திக் மற்றும் அவரின் தந்தை சிவகுமார் ஆகிய மூவரும் இணைந்து அகரம் என்கின்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். இதில் பல மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்கள். இந்த வருடத்தில் மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்திக் மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசியிருந்தார்கள். இந்த அறக்கட்டளை சிவகுமாரின் இளைய மகனான கார்த்திக்கு இரண்டு வயது இருக்கும்போது ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, கார்த்திக், சிவகுமார் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி இருந்தார்கள்.
இதில் பேசிய நடிகர் கார்த்திக் கூறியதாவது தனக்கு இரண்டு வயசு இருக்கும் போது கல்விக்கான அறக்கட்டளையை ஆரம்பித்ததாக அப்பா கூறியிருக்கின்றார். தற்போது 45 வது ஆண்டு விழா நடைபெற்று வருகின்றது. இந்த அறக்கட்டளை தொடங்கிய போது ஒரு படத்துக்கு எங்க அப்பா வாங்கிய சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். அந்த பணத்தை அப்படியே வைத்து இந்த அறக்கட்டளையை தொடங்கினார்.
பல வருடங்களுக்கு முன்பு தங்கம் ஒரு சவரன் 750 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தபோது முதல் பரிசாக மாணவர்களுக்கு 1000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 750 ரூபாயும், மூன்றாவது பரிசாக 500 ரூபாயும் வழங்கினார் என்று தனது தந்தை குறித்து பெருமையாக பேசி இருந்தார். அதையடுத்து பேசிய சூர்யா கார்த்திக் சொன்னதைப் போல ஆரம்பத்தில் நான் எதுவும் உதவாமல் இருந்தேன்.
ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலும் எனக்கு விருப்பமில்லை. சினிமாவுக்கு வருவேன் கேமரா முன் நிற்பேன் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. திடீரென அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். எதுவுமே தெரியாமல் கடைசியில் இருந்தால் கூட போராடினால் முன்னேற முடியும் என்பதை கற்றுக் கொண்டேன்.
இன்றைக்கும் தமிழகத்தில் முதல் முறை பட்டதாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். கல்வி மட்டுமே நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும். அதை மட்டும் விட்டுடாதீங்க. சுத்தி இருக்கிற எல்லாமே தப்பா இருக்கும். நெகட்டிவிட்டி ரொம்ப அதிகமா இருக்கும். ஆனா நீங்க சரியா இருங்க என வருங்கால சந்ததிக்கு ஊக்கமளிக்கும் படி பேசினார் நடிகர் சூர்யா.
அதைத் தொடர்ந்து பேசிய சிவகுமார் தெரிவித்திருந்ததாவது நான் பள்ளியில் படிக்கும் போது ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக்கு ரெண்டே முக்கால் ரூபாய் பீஸ், 9 , 10ம் வகுப்புக்கு அஞ்சே கால் ரூபாய் பீஸ், வரும்போதுதான் நான் மொத்த பள்ளிப்படிப்பையும் முடிக்க எவ்வளவு பீஸ் கட்டியிருக்கின்றேன் என எண்ணி பார்த்தேன்.
மொத்தம் 375 ரூபாய் 50 பைசா பீஸ்-ஆக கட்டி இருக்கின்றேன். நான் எஸ்எஸ்எல்சி படித்து முடிப்பதற்கு இவ்வளவுதான் செலவாகி இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு கார்த்திக் பையனுக்கு ப்ரீ கேஜிக்கு 2.5 லட்சம் கேட்கிறார்கள். கற்பனை பண்ணிப் பாருங்கள் என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார் சிவகுமார்.