வி.கே.ராமசாமியின் வியத்தகு படங்கள் - ஓர் பார்வை
நடிகர் விகே.ராமசாமி இயல்பான நகைச்சுவை நடிகர். அதாவது இவர் நடிக்கும்போது எந்த ஒரு அலட்டலும் இருக்காது. உடல் அசைவு கூட இருக்காது. டயலாக் மட்டும்தான். பார்க்கும் ரசிகர்கள் தான் விலா நோக விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அத்தகைய நகைச்சுவை உணர்வை அசால்டாக தன் வசனங்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாகப் படைப்பவர் தான் வி.கே.ராமசாமி. தமிழ்சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களுள் இவரது பாணியே தனி தான். இனி இவரைப் பற்றி...
விருதுநகர் கந்தன் ராமசாமி என்பது இவரது முழு பெயர். சுருக்கமாக வி.கே.ராமசாமி. இவர் 1.1.1926ல் பிறந்தார். 24.12.2002ல் காலமானார்.
தனது 21வது வயதில் 60 வயது கிழவனாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் வாயைப் பிளக்க வைத்துள்ளார். அந்தப்படம் தான் நாம் இருவர். 1947ல் வெளியானது. 1940களில் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவருக்கு முதுமை வேடங்களே அதிகமாக கிடைத்தன. தனது திரையுலக வாழ
;க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் துணைப்பாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். 15 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
இவர் 60 மற்றும் 70களில் முன்னணியில் இருந்த டி.ஆர்.ராமலிங்கம், எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். இவரது வசன உச்சரிப்பே நமக்கு நகைச்சுவையை வரவழைத்துவிடும். அந்தளவிற்கு அது தனித்துவமானது. மனோரமாவுடன் இணைந்து நகைச்சுவைப்படங்கள் நிறைய நடித்துள்ளார். கடைசியாக நடித்த படம் டும் டும் டும். துணைப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.
நாம் இருவர்
பொங்கல் பரிசாக 1947ல் ஏவிஎம் தயாரிப்பில் ஆவிச்சி மெய்யப்பன் இயக்கத்தில் வெளியான படம். ப.நீலகண்டன் கதை எழுத, ஆர்.சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும்
செம ரகம். டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஏ.ஜெயலட்சுமி, குமாரி கமலா உள்பட பலர் நடித்துள்ளனர்.
கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, மகான், காந்தி மகான் ஆகிய பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. பின்னாளில் ஏவிஎம் தயாரிப்பில் பிரபு, சிவாஜி நடிக்க நாம் இருவர் என்ற அதே பெயரில் படம் ரிலீசானது.
வீரபாண்டிய கட்டபொம்மன்
1959ல் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம் வீரபாண்டிய கட்டபொம்மன். ஜி.ராமநாதன் இசை அமைத்த இப்படத்தில் சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினிகணேசன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் வி.கே.ராமசாமி எட்டப்பனான நடித்துள்ளார்.
இப்படத்தில் சிவாஜி பேசும் கிஸ்தி, திரை, வரி , வட்டி என்ற வசனம் இன்றும் பேசப்படுகிறது. வரலாற்றுப்படமான இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் இந்தப்படம் டிடிஎஸ் ஒலிப்பதிவுடன் மெருகூட்டப்பட்டும் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது
குறிப்பிடத்தக்கது. இன்பம் பொங்கும், மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு, சீர்மேவும், அஞ்சாத சிங்கம், ஆத்துக்குள்ளே ஊத்து, சிங்கார கண்ணே, கறந்த பாலையும், டக்கு டக்கு, வெற்றி வடிவேலனே, ஜக்கம்மா...வீரத்தின் சின்னமே ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவை.
மாட்டுக்கார வேலன்
1970ல் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி, சோ உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை கே.வி.மகாதேவன் அமைத்தார். பாடல்கள் அனைத்தும் ரசனை விருந்தாக அமைந்தன. ஒரு பக்கம் பாக்குறா, சத்தியம் நீயே, தொட்டுக்கொள்ளவா, பட்டிக்காடா பட்டணமா, பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா...பாடல்களைப் படிக்கும்போதே அட அட என்ன அருமையான பாடல்கள் என்று நம்மை முணுமுணுக்க வைக்கிறது அல்லவா..? அதுதான் படத்தை சக்கை போடு போட்டு வெற்றி பெற வைத்தன.
கல்யாணராமன்
1985ல் கமல்ஹாசன் நடிக்க மீனா பஞ்சு அருணாசலம் தயாரிக்க, ஜி.என்;;.ரங்கநாதன் தயாரிக்க இளையராஜாவின் இன்னிசையில் வெளியான படம் கல்யாணராமன். இப்படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி, புஷ்பலதா, வி.எஸ்.ராகவன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ்சினிமா வரலாற்றில் வெளிப்புறங்களில் படமாக்கப்பட்ட முதல் இரட்டை வேடப் படம் இது. இப்படத்தின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க, பார்க்கத் தூண்டுபவை.
காதல் தீபம் ஒன்று, காதல் வந்திருச்சு, மலர்களில் ஆடும், நினைத்தாலே இனிக்கும் ஆகிய தேன் சொட்டும் பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. இப்படத்தில் விகே.ராமசாமியின் நடிப்பு குணச்சித்திர வேடத்தில் யதார்த்தமாக இருக்கும்.
வேலைக்காரன்
1987ல் வெளியான ரஜினிகாந்த் நடித்த படம் வேலைக்காரன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கே.பாலசந்தர் கதை எழுத ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி தயாரித்த படம். இப்படத்தில் ரஜினிகாந்துடன், சரத்பாபு, அமலா, செந்தில், நாசர், வி.கே.ராமசாமி, கே.ஆர்.விஜயா, பல்லவி, புலியூர் சரோஜா, டெல்லி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் வி.கே.ராமசாமி ரஜினியின் தாத்தா வளையாபதியாக வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.
இளையராஜாவின் தெவிட்டாத இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. இந்தப்படத்தில் இருந்துதான் ரஜினிகாந்த் தனது சிகை அலங்காரத்தை மாற்றி அதை;தார். 1996 வரை இதே பாணியைப் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு தா உன் உயிரை, மாமனுக்கு மயிலாப்பூர் தான், பெத்து எடுத்தவ தான், வாவா வா கண்ணா வா, வேலை இல்லாதவன் தான், தோட்டத்திலே பாத்திகட்டி ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. இவை அனைத்தையும் எழுதியவர் கவிஞர் மு.மேத்தா.