More

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் அதிரடி படங்கள்

நடிகர்களில் பல்வேறு மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். தமிழுக்கு அது யாருன்னு உங்களுக்கே தெரியும். சிறு குழந்தைகளுக்கும் கூட தெரியும்.  அதனால்தான் சூப்பர் ஸடாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்…என்ற பாடலே வெளியானது. அவர் தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மலையாளத்துக்கு சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவரை கேரளா சூப்பர் ஸடார் என்றும் அழைப்பர்.

Advertising
Advertising

தெலுங்கில் சூப்பர் ஸ்டார் தான் நாம் இப்போது பார்க்க இருக்கும் சிரஞ்சீவி. அங்கு இவரை மெகா ஸ்டார் என்றே அழைப்பர். இவர் ஒரு அதிரடி நாயகன். இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் ரகங்கள் தான். இவர் தமிழில் நடித்த படங்களும் சக்கை போடு போட்டன. இவரைப் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம். 

சிரஞ்சீவியின் இயற்பெயர் கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத். ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டம், நரசப்பூர் அருகில் உள்ள மொகல்தூரில் வெங்கடராவோ – அஞ்சனா தேவி தம்பதியினருக்கு மகனாகப் 22.8.1955ல் பிறந்தார். நடிகர், அரசியல்வாதி என இருதுறைகளிலும் பின்னி பெடல் எடுத்தார். 

1977ல் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி தற்போது வரை தொடர்கிறார். இவரது மனைவியின் பெயர் சுரேகா. சுஷ்மிதா, ராம் சரண் தேஜா, ஸ்ரீஜா என 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ராம் சரண் தற்போது அதிரடி நாயகனாக தெலுங்கு திரையுலகில் பிரவேசிக்கிறார். 

நேற்று இவருக்கு பிறந்தநாள். இன்று 67வது வயதில் காலடி எடுத்து வைக்கும் இவரை திரையுலகினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

சிரஞ்சீவியின் பிறந்தநாளை ரசிகர்கள் இரு தினங்களாகக் கொண்டாடி வருகின்றனர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவரது பிறந்தநாளையொட்டி இவரது புதிய படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தின் பெயர் காட்பாதர். 

நேற்று தமிழில் அஜீத் நடித்த வேதாளம் திரைப்படத்தைத் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த படத்திற்கு போலா சங்கர் என பெயரிட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள போலா சங்கர் என அறிவித்து மோஷன் டைட்டில் போஸ்டரை மகேஷ்பாபு வெளியிட்டார். மேலும் அவர் தற்போது நடித்து முடித்துள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 

இவர் 2006ல் பத்ம பூஷண்; விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். இவர் தொடங்கிய கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி. 2008ல் கட்சியைத் தொடங்கினார். இவர் 2009ல் சட்டமன்ற தேர்தலில் பலேகொல், திருப்பதி அகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். திருப்பதியில் வெற்றி பெற்றார். 

2011ல் ராஜீவ்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

தொடக்கக்காலத்தில் நம்ம ஊரு ரஜினிகாந்த் மாதிரி வில்லனாகத் தான் படங்களில் அறிமுகமாகி உள்ளார். 1978ல் அவர் புனதிரல்லூ என்ற படத்தில் தான் முதலில் நடித்தார். ஆனால் முதலில் வெளியான படம் பிராணம் க்ஹரீது. 

இவரைப்பற்றி பாலசந்தர் கூறுகையில், சிரஞ்சீவிக்குள் கமலும், ரஜினியும் இருக்கின்றனர் என்றார். 2006ல் ஆந்திர பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

சிரஞ்சீவி நடித்த தமிழ்ப்படங்கள் இவை தான். 

சூரியன் சட்டக்கல்லூரி, சயீரா நரசிம்ம ரெட்டி, மாப்பிள்ளை, ராணுவ வீரன், முரடன், தர்மபிரபு, பலசாலி, வீர மருது, மாண்புமிகு மேஸ்திரி, டைகர், இந்திரன், சைரா, ரவுடி பாஸ், தங்கமலைத் திருடன், சிங்க நடை, போக்கிரி மாப்பிள்ளை. மாப்பிள்ளை படத்தில் ரஜினிகாந்திற்காக கெஸ்ட் ரோலில் நடித்தார். இவற்றில் சில படங்களை இங்கு பார்ப்போம். 

ராணுவ வீரன் 

1981ல் வெளியான படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட். இந்தப்படத்தில் சிரஞ்சீவி வில்லன் வேடத்தில் அசத்தியிருப்பார். சொன்னா தானே தெரியும், வாருங்கள், மல்லிகைப்பூ ஆகிய பாடல்கள் உள்ளன.

தங்கமலைத்திருடன் 

1986ல் கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிரஞ்சீவி, ராதா உள்பட பலர் நடித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். தேவி சாம்பவி, சமக்கு சமக்கு, ஸ்ரீ ஆஞ்சநெயம், பெண்ணே அன்பான, சத்தியமே என் பாதை, சுபவேளை நாளை ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

ரவுடி பாஸ் 

இந்தப்படம் சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படம் ஒன்றின் டப்பிங். தமிழில் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி, ரம்யா கிருஷ்ணன், ரம்பா, லட்சுமி, சிவரஞ்சனி உள்பட பலர் நடித்துள்ளனர். கோட்டி இசை அமைத்துள்ளார். மாதேஸ்வரி தயாரிக்க சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான படம்.

இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணனும், தொடை அழகி ரம்பாவும் கவர்ச்சியை வாரி வாரி வழங்கியிருப்பார்கள். அந்தக்காலத்தில் சக்கை போடு போட்ட படம் இது என்றால் மிகையில்லை. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு தமிழில் சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவி என்று டைட்டில் போடுவார்கள். 

Published by
adminram

Recent Posts