
திரையுலகம் சிலரை புகழின் உச்சியில் நிறுத்தும். கோடிகளை அள்ளித்தரும். சிலரை அதாள பாதளத்தில் தள்ளிவிடும். திரையுலகில் வெற்றி மட்டுமே அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். தோல்வி என்றால் உங்களை யாரும் சீண்ட மாட்டார்கள். அப்படி ஒருவர்தான் நடிகர் அபினய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் அறிமுகமான திரைப்படம் துள்ளுவதோ இளமை. அடல்ட் கதை, யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான பாடல்கள் ஆகியவற்றால் இப்படம் வெற்றியை பெற்றது. எனவே, இப்படத்தில் நடித்த அபினய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அவருக்கு 8 படங்கள் ஒப்பந்தம் ஆனது. இதில், பெரிய பட நிறுவனங்களும் அடக்கம். சில விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சாக்லேட் பாய் போல் உருவம் உள்ள அபிநய்க்கு ஆக்ஷன் செட் ஆகாது என்பதால் காதல் கதைகளில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவர் 2வதாக நடித்த ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தது. தயாரிப்பாளர்கள் என்ன நினைத்தார்களோ! அந்த 8 பட வாய்ப்புகளும் அவரை விட்டு போனது. ஒரே நாளில் சூனியத்தை உணர்ந்தார் அபினய். சில படங்களில் அமெரிக்கா மாப்பிள்ளை உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது.
சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த அபினய் ‘என்னை அமெரிக்க மாப்பிள்ளையாக மட்டுமே பார்த்தனர். என் அம்மா இறந்த பின் வறுமையில் சிக்கினேன். வீடு, டிவி, ஏசி மட்டுமில்லாமல் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை கூட விற்றுவிட்டேன். எனக்கென்று ஒரு நிரந்தர வீடு கிடையாது. அம்மா உணவகத்தில்தான் சாப்பிடுகிறேன்’ என கண்ணீர் மல்க அவர் பேட்டி கொடுத்துள்ளார். தனக்கு யாரேனும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் தன் நிலை மாறும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.





