சேட்ட பிடிச்ச பைய சார் கார்த்தி… மணிரத்னத்திடம் பல்ப் வாங்கிய சம்பவம்

by ராம் சுதன் |

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது நடந்த ஒரு காமெடியான சம்பவம், நடிகர் கார்த்தி வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்டதாம்.

நடிகர் சிவக்குமாரின் மகனும் சூர்யாவின் இளைய சகோதரருமான நடிகர் கார்த்தி ஆரம்பத்தில் நடிகராகத் திரைத்துறைக்குள் வரவில்லை. சென்னையில் இன்ஜினீயரிங் முடித்த அவர் முதுகலைப் படிப்பை அமெரிக்காவின் நியூயார்க்கில் படித்து முடித்தார்.

நியூயார்க்கில் படிக்கும்போதே பகுதிநேரமாக டிசைனிங் வேலை செய்துவந்த அவர், கல்லூரியிலும் சினிமா தொடர்பான படிப்பை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்திருக்கிறார். இதனால், சினிமா மீது அவருக்கு இயல்பாகவே அவருக்கு ஈடுபாடு வந்தது. படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த அவர், முதலில் மணிரத்னத்தைச் சந்தித்து அவரிடம் உதவி இயக்குநராக வேலையில் சேர்ந்தார்.

ஆயுத எழுத்து படத்தில் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் கார்த்தி. அந்த சமயத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் அவற்றை அவர் மறுத்து வந்தபோது தந்தை சிவக்குமார், 'நீ எப்போது வேண்டுமானாலும் படம் இயக்கலாம்.

ஆனால், வயது இருக்கும்போதுதான் நடிக்க வாய்ப்பு வரும். இது மீண்டும் வராது’ என்று சொல்லவேதான் 2007-ல் அமீரின் பருத்திவீரன் மூலம் நடிகரானார். அந்தப் படம் அவருக்குப் பல்வேறு விருதுகளையும் பாராடுகளையும் பெற்றுத்தந்தது.

ஆயுத எழுத்து டைமில் உதவி இயக்குநராக இருந்தபோது, மணிரத்னம் ஒரு மணியளவில் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போனால் 3 மணியளவில்தான் அலுவலகம் திரும்புவாராம். அந்த இரண்டு மணி நேரமும் அலுவலகத்தில் பயங்கர சேட்டை செய்வாராம் கார்த்தி.

அந்த மாதிரி ஒருமுறை மணிரத்னம் அலுவலகத்தில் சேரில் அமர்ந்துகொண்டு சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தாராம் கார்த்தி. அண்ணாமலை படத்தின் 'இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது’ வரிகளைப் பாடியவாறே சேரில் சுற்றியபோது, அந்த சமயத்தில் சரியாக மணிரத்னம் வந்து நிற்கவும் சரியாக இருந்திருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்தைப் பார்த்தவுடன் பாட்டை அப்படியே நிறுத்தி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாராம் கார்த்தி. என்ன சொல்லப் போகிறாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், மணிரத்னம் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாராம்.

இதனால், நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் கார்த்தி. ஆயுத எழுத்து படத்தில் மைக்கேல் கேரக்டரில் நடித்த சித்தார்த்தின் நண்பராக ஒரு சீனிலும் கார்த்தி நடித்திருந்தார். பின்னாட்களில், தனது குருநாதரான மணிரத்னம் இயக்கத்திலேயே காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் கார்த்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story