நான் செத்துட்டேன்னு சொன்னாங்க!.. டிக்கிலோனா புகழ் மாறன் உருக்கம்.......
விஜய் டிவியில் ஒளிபரப்பாக ரசிகர்களை கவர்ந்த லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் மாறன். ஜெயா தொலைக்காட்சியிலும் சில காமெடி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார். சினிமாவிலும் இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், பல வருடங்களாக அவர் இந்த துறையில் இருந்தும் அவருக்கு என்னவோ சரியான வாய்ப்புகள் அமையவே இல்லை.
சந்தானம் நடிப்பில் உருவாகி சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து கலக்கி இருந்தார். மனநல காப்பகத்தில் சிக்கிய சந்தானத்தை வெளியே அழைத்து வரும் ‘எஸ்கேப் பைத்தியம்’ வேடத்தில் அவர் நடித்திருந்தார். அடிக்கடி ‘இன்னும் நீ என்ன பைத்தியக்காரன்னு நினைச்சிட்டு இருக்கல்ல’ என அவர் பேசிய வசனங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.எனவே, இவரை வைத்து பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலா வர துவங்கிவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘டிக்கிலோனா படம் நடித்த பின் என்னை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். பல இடங்களில் இருந்தும் பலரும் தொடர்பு கொண்டு என்னை பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு கட்டத்தில் நான் இறந்து விட்டேன் என்றெல்லாம் செய்தி பரப்பினார்கள். அப்போது வருத்தமாக இருந்தது. டிக்கிலோனா திரைப்படம் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என அவர் பேசியுள்ளார்.