நடிகர் திலகத்துக்கே சவால் விட்ட பாடகர்...! 11 தடவை பாடல் கேட்டும் ரெஸ்ட் எடுத்த சிவாஜி
தமிழ்சினிமா உலகின் சிம்ம சொப்பனம், தவப்புதல்வன், நடிகர் திலகம் என்றெல்லாம் போற்றப்படுபவர் செவாலியே சிவாஜி கணேசன். முதல் படமான 'பராசக்தி'யிலேயே பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பார். 'தமிழ்சினிமா உலகின் அகராதி' என்றே அவரை சொல்லலாம். எந்த ஒரு நடிப்பையும் அசால்டாக நடித்து அசத்துபவர் அவர்.
தனக்கான நடிப்பு வராவிட்டால் அதற்காகத் தனக்குத் தானே கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுப்பாராம். அதன்பிறகு தான் சூட்டிங் ஸ்பாட்டுக்கே போவாராம். அப்படிப்பட்ட நடிகருக்கே ஒரு முறை சவால் வந்தது.
அந்த சவாலை விட்டவர் தான் பிரபல பின்னணி பாடகர் டிஎம்.சௌந்தரராஜன். அவர் நேரடியாக விடவில்லை என்றாலும் தன் பாடல் மூலமாக சவால் விட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
'கௌரவம்' படத்திற்காக அவர் பாடிய அந்தப் பாடல். 'நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...' இந்தப் பாடலை சிவாஜி கிட்டத்தட்ட 11 தடவைக்கு மேல் கேட்டு விட்டாராம். எந்த ஒரு பாடலையும் 2 தடவை கேட்டதுமே ஸ்பாட்டுக்கு நடிக்கச் சென்று விடுவாராம்.
ஆனால் 11 தடவைக்கும் மேல் ஆழ்ந்து கேட்ட சிவாஜி இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்திடம் 'சுந்தரா... கொஞ்சம் டைம் கொடு. சூட்டிங்கை அப்புறம் வச்சிக்கலாம்னு சொல்ல, டைரக்டர் ஒரே பதற்றம்... ஏதும் பிரச்சனையா...'ன்னு கேட்டாராம்.
அதற்கு சிவாஜியோ, 'இல்லை சுந்தரா... இந்தப் பாடலுக்கு டிஎம்எஸ் அண்ணா எனக்கு ஒரு சவால் விட்டுள்ளார். அவரே நடிகருக்கான வேலை அத்தனையையும் குரலில் செய்து விட்டார். அப்படி என்றால் நான் எப்படி நடிக்க வேண்டும்? பாடலின் பல்லவியை ஒரு இடத்தில் ஒரு மாதிரியும், இன்னொரு இடத்தில் வேறு மாதிரி உணர்ச்சிகளுடனும் பாடி அசத்தியுள்ளார்.
பல்லவியில் ஒருவித பாவம், ஆக்ரோஷம்... சரணத்தில் வேறு விதமான தொனி என பல பரிமாணங்களைப் பாடலில் கொண்டு வந்துள்ளார். நான் இன்னும் அதிகமாக இந்தப் பாடலுக்கு மெனக்கிட வேண்டும். அதனால் எனக்கு ரெஸ்ட் தேவை. அப்புறமா நடித்துக் காட்டுகிறேன்' என்று ரூமுக்குச் சென்றாராம் சிவாஜி.