Cinema History
நடிகர் திலகம் சிவாஜிக்கு பிடித்த உணவு எது? எந்தெந்தப் படங்களில் என்னென்ன ஸ்பெஷல் வருதுன்னு பாருங்க…!
என்ன தான் நடிகர் திலகம் என்றாலும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் சில வகையான உணவுகள் பிடிக்கும் அல்லவா. அவர் ஒரு சாப்பாட்டு பிரியர். அவரது அன்னை இல்லத்திற்குப் போய் வந்தவர்களைக் கேட்டால் தெரியும். அப்படி விதவிதமான உணவுகளைத் தந்து அசத்துவார்களாம். அந்த உணவுகளை இனம் கண்டு கொண்டு சில படங்களில் சூசகமாகக் காட்டியிருப்பார்கள். அது என்னென்ன படங்கள்னு பார்ப்போமா…
தமிழ்த்திரை உலகம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம் தான். இவரது படங்களில் இவர் சின்ன சின்னக் காட்சி என்றாலும் அற்புதமாக நடித்து அசர வைத்து விடுவார். முக்கியமாக அவர் சாப்பிடும் காட்சி படங்களில் பிரமாதமாக வந்திருக்கும். அது என்னென்ன படங்கள்னு பார்ப்போமா…
முதல் மரியாதை படத்தில் ராதா மீன் சாப்பாடு கொடுப்பார். அந்தக் காட்சியில் ராதா மீனை வாய்க்குள்ள போட்டு உருவினதும் சிவாஜி ஒரு ஏக்கமா ஒரு பார்வையைப் பார்ப்பாரு. அப்பா சான்ஸே இல்லை. அப்படி ஒரு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் நடித்த நடிப்பு இவரது சக நடிகர்களாக பிற மொழிகளில் இருக்கும் என்டிஆர், ராஜ்குமாருக்குக் கூட வராது.
‘இமயம்’னு ஒரு படம். நேபாளத்தில் ஒரு இந்து கோவில். கதாநாயகி ஸ்ரீவித்யாவும், அவங்க அம்மாவும் வருவாங்க. காதலன் சிவாஜிக்கு ஒரு பாக்ஸைக் கொடுப்பார். அதுல உங்களுக்குப் பிடிக்குமேன்னு மான் கறி செஞ்சிக் கொண்டு வந்துருக்கேன்னு சொல்வார் ஸ்ரீவித்யா. உடனே அதை சாப்பிடுவார் சிவாஜி. ஆனா படத்துல ஒரு சின்ன லாஜிக் இடிக்கும். கோவில்ல போய் ஏன் மான் கறின்னு. நேபாளி பூசாரி சிகரெட் பிடிச்சிக்கிட்டே பிரசாதம் கொடுப்பாராம். அப்படி ஒரு நக்கலும் இருக்கும்.
‘சந்திப்பு’ படத்தில் சிவாஜி பாக்ஸர். மனோரமா அவரை விரும்புவார். சிவாஜி பயிற்சியில் இருககும்போது ஒரு பாக்ஸைக் கொண்டு வந்து கொடுப்பார். அதை சாப்பிடுற சிவாஜி, ‘என்ன கறி’ன்னு கேட்பார். ‘பெரியாட்டுக்கறி’ன்னு மனோரமா சொல்வார்.’ என்ன ஆடு ஒரே இழுவையா இருக்கு’ன்னு சொல்ல, ‘பெரிய ஆடு’ன்னு சொல்வார். என்ன தான் பெரிய ஆடுன்னாலும் இப்படி இருக்காதேன்னு சிவாஜி சொல்ல ராசா அது மாடுன்னு சொல்லவும், ‘ச்சீ கருமம்… பழக்கமில்லாததை திங்கச் சொல்றீயா’ன்னு சிவாஜி கோபப்படுவார்.
‘இமைகள்’ படத்தில் சிவாஜி ஒரு இஸ்லாமியர். அருக்கு சரிதா சாப்பாடு பரிமாறுவார். ‘உங்களுக்கு கருவாடு பிடிக்கும்னு, மொச்சைக் கொட்டை போட்டு கருவாட்டுக் குழம்பு செஞ்சி வச்சிருக்கேன்’னு சொல்வார். கூடவே 2 வாத்து முட்டையும் இருக்குன்னு சொல்வார்.
‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜிக்கு சிவக்குமார் உணவு பரிமாறுவார். அதை அவர் சாப்பிடும் அழகு கொள்ளை அழகு தான். இப்படி எல்லாம் கூட அழகா சாப்பிட முடியுமான்னு எண்ணத் தோன்றும்.