என்னோட வீடு 8 கோடி தெரியுமா!. இன்னும் நிறைய இருக்கு!. எஸ்.ஜே.சூர்யா என்ன சொல்றார் பாருங்க!..
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஹோட்டல்களில் சர்வராக கூட வேலை செய்திருக்கிறார். சில இயக்குனர்களிடம் கடைசி உதவியாளராக வேலை செய்திருக்கிறார். பாரதிராஜா கிழக்கு சீமையிலே இயக்கிய போது அந்த இடத்திற்கு போய் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தே சினிமாவை கற்றுக்கொண்டவர் இவர்.
அதன்பின் வஸந்த் இயக்கிய ஆசை படத்தில் வேலை செய்தார். அப்போதுதான் அவருக்கு அஜித்தின் நட்பு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் வேலை செய்துவிட்டு ஒரு கதை எழுதினார். அதில் நடிக்க அஜித்தும் சம்மதித்தார். அப்படி உருவான படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட். அதன்பின், தான் இயக்கிய சில படங்களில் அவரே கதாநாயகனாக நடித்தார். அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது பல வருடங்களாவே அதுவே தொடர்ந்து வருகிறது.
சில படங்களில் வில்லனாகவும் கலக்கி இருக்கிறார். மெர்சல், மாநாடு உள்ளிட்ட சில படங்களில் அசத்தலான வில்லனாக நடித்திருந்தார். விஷாலுடன் இணைந்து நடித்த மாணிக் பாட்ஷா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இப்போது நடிப்பு ராட்சசன் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்திருக்கிறது.
ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ள இந்தியன் 2 படத்திலும் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘இந்தியன் 2 படத்தில் எனக்கு நல்ல வேடம். ஒரு பெரிய பணக்காரனாக வருவேன். ஷங்கர் ஒரு காட்சியை எடுப்பது என்பது ஆயிரம் வீடு கட்டுவது மற்றும் ஆயிரம் திருமணம் செய்வது போல. அவ்வளவு மெனக்கெடுகிறார்.
இந்த படத்தில் நான் தங்கியிருக்கும் வீட்டின் மதிப்பே 8 கோடி. அதாவது 8 கோடி செட் போட்டு எடுத்திருக்கிறார். கமல் சாருடன் நடிக்க போகிறேன் என்பது உறுதியானபோதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க துவங்கிவிட்டது. கண்டிப்பாக இந்தியன் 2 எல்லோருக்கும் பிடிக்கும்’ என அவர் சொல்லி இருக்கிறார்.