திமிர்...வாய்க்கொழுப்பு...ஈகோ... 2வது இன்னிங்ஸில் தேறுவாரா வடிவேலு?...

கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்கள்தான் மீம்ஸ்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பஞ்சாயத்தால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு, 4 வருடங்கள் கழித்து தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து லைக்கா தயாரிப்பில் 2 படங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். சிராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
வடிவேலுவை சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவரின் மறுமுகம் என்ன என்பது அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்குமே தெரியும். ஏதோ, திமுகவிற்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்ததால் கோபமடைந்த அதிமுக தரப்பு வடிவேலுவை நடிக்க விடாமல் செய்துவிட்டதாக பலரும் நினைக்கின்றனர். அதில் துளியும் உண்மையில்லை. வடிவேலுவுக்கு யாரும் ஆப்பு வைக்கவில்லை. ஆப்பை அவரே தயாரித்து தனக்கு சொருகிக்கொண்டார் என்பதுதான் மாபெரும் உண்மை.
தொடக்கத்தில் தனி ட்ராக் காமெடிகளில் மட்டுமே வடிவேலு நடித்து வந்தார். அவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போக ஹீரோவுடன் எப்போதும் வலம் நடிகராக மாறினார். அங்குதான் வடிவேலுன் ஆட்டம் துவங்கியது. ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் என சம்பளம் எனப்பேசினார். படப்பிடிப்புக்கு சென்றால் சில மணி நேரங்கள் மட்டுமே நடித்து விட்டு சென்றுவிடுவார். எனவே, அவருக்கான காட்சிகளை எடுக்கும் நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதனால், தயாரிப்பாளருக்கு சில கோடிகள் மேலும் செலவாகும். இப்படி பல தயாரிப்பாளர்களை கதறவிட்டவர் வடிவேலு. அதேபோல், சிலரிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொள்வார். ஆனால், நடித்து தரமாட்டார். எவ்வளவு முயன்றாலும் அந்த அட்வான்ஸ் பணத்தை வடிவேலுவிடமிருந்து வாங்க முடியாது.
ஒருபக்கம் தன்னால்தான் படம் ஓடுகிறது என்கிற எண்ணம் வடிவேலுக்கு வந்தது. ‘வடிவேலு என் படத்துல நீங்க இருக்கணும்’ என சந்திரமுகி படத்துக்காக ரஜினியே இறங்கி வந்து வடிவேலுவிடம் கேட்க, தன்னை சினிமாவை காப்பாற்றும் கடவுளாகவே நினைத்துக்கொண்டார். இவர் நடிக்கும் படங்களில் சந்தானம் உள்ளிட்ட சில காமெடி நடிகர்கள் நடித்தால் இயக்குனருக்கு குடைச்சல் மேல் குடைச்சல் கொடுப்பார். இம்சை அரசன் 24ம் புலிகேசி பட படப்பிடிப்பில் அப்படத்தின் இயக்குனர் சிம்பு தேவனை வடிவேலு மதிக்கவே இல்லை. அங்குதான் பிரச்சனை துவங்கியது.

அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களின் படப்பிடிப்பில் அவர் கொடுத்த குடைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் அவரே படத்தை இயக்க துவங்கினார். கதை மற்றும் காட்சிகளில் தலையிட்டு படத்தை கெடுத்தார். அதனால்தான், அப்படங்கள் மாபெரும் தோல்வியை அடைந்து அந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், வடிவேலு தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. இதனால்தான் வடிவேலுவை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர் தயங்குகின்றனர். இதனால்தான் வடிவேலு இத்தனை வருடங்கள் வீட்டில் சும்மா உட்கார வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆனால், பல வருடங்கள் கழித்தும் இன்னும் வடிவேலு மாறவில்லை என்பதற்கு சமீபத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பே சாட்சி. செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் நேரிடையாக பதில் கூறவில்லை. பல கேள்விகளுக்கு திமிறாக பதிலளித்தார். ‘இந்த வைகைப்புயல் இனிமேல் ஷங்கர் பக்கம் வீசாது’,‘எனக்கு எண்டே கிடையாது’ என அவர் பேசினார். இன்னும் அவரின் திமிரோ, வாய்க்கொழுப்போ, ஈகோவோ கொஞ்சம் கூட குறையவிலலை என்பதுற்கு இதுவே சாட்சி.

காமெடி நடிகனை நம்பி மட்டும் சினிமா இயங்குவது இல்லை. கடந்த சில வருடங்கள் வடிவேலு இல்லாமல் திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, வடிவேலு தனது ஈகோவை விட்டு கீழிறங்கி, தயாரிப்பாளர்களின் சிரமத்தை புரிந்து நடந்து கொண்டால் மட்டுமே அவரின் 2வது இன்னிங்கிஸ் சிறப்பாக அமையும். இல்லையேல் மீண்டும் அவரை திரையுலகம் நிராகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மாறுவாரா வடிவேலு?....