
சண்டியரே சண்டியரே என்று விருமாண்டியைச் சுற்றி சுற்றி வந்து காதல் டூயட் பாடி அசத்தினார் அபிராமி. வளர்ந்த தேகம், கூர்மையான மூக்கு, வாளிப்பான உடல், மீன் போன்ற கண்கள் என்று இவரது அழகை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். அவ்வளவு இருந்தும் படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லையே ஏன் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இவர் நடித்த படங்களில் விருமாண்டி, சார்லி சாப்ளின், சமுத்திரம், தோஸ்த், வானவில், மிடில்கிளாஸ்மாதவன், கார்மேகம், சமஸ்தானம், 36 வயதினிலே இவை தான் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர வேறு எதுவும் கைவசம் இல்லை. அது சரி…இவரது பின்புலத்தை சற்று பார்க்கலாமா…
அபிராமியின் இயற்பெயர் திவ்யா கோபிகுமார். 26.7.1983ல் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். நடிகை, தொகுப்பாளர் என இருபரிமாணங்களில் ஜொலித்தார். இவரது வாழ்க்கைத் துணைவரின் பெயர் ராகுல் பவனன். இவர் புகழ்பெற்ற எழுத்தாளரான பவனனின் பேரன். இவரை 27.12.2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம். 12 இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் டிவியில் ரிஷிமூலம் என்ற தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
இவர் நடித்த படங்களில் இருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.
விருமாண்டி

விருமாண்டியில் அன்னலெட்சுமியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தார். 2004ல் கமல்ஹாசன் எழுதி இயக்கி நடித்த படம். இந்தப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி, நாசர், பிரமிட் நடராஜன், பாலா சிங், தென்னவன், காந்திமதி, பெரிய கருப்புத் தேவர், கு.ஞானசம்பந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதே படம் தெலுங்கில் போதுராஜூ என்ற பெயரில் வெளியானது.
இந்தப்படத்தில் மரண தண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இதனால் இந்தப் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதியுள்ளார். அதாவது விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை வெவ்வேறு விதமாக நகர்வது படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
இப்படத்தின் இசையை இளையராஜா அமைத்தார். ஒன்னவிட, அன்னலெட்சுமி கண்ணசச்சா, நெத்தியில பொட்டு வச்சு, மகராசி மண்ண விட்டு போனியே.., கருமாத்தூர் காட்டுக்குள்ளே…, அந்த காண்டாமணி, மாட விளக்கே, கொம்புல பூவ சுத்தி, கர்ப்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது, சண்டியரே சண்டியரே…ஆகிய பாடல்கள் பட்டையைக் கிளப்பும் ரகங்கள். இவற்றில் ஒன்ன விட பாடலை கமல்ஹாசன் எழுதினார். அன்னலெட்சுமி கண்ணசச்சா, சண்டியரே சண்டியரே பாடல்களை இளையராஜா எழுதினார். மீதமுள்ள பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதினார்.
மிடில் கிளாஸ்மாதவன்

2001ல் வெளியான இப்படத்தை டி.பி.கஜேந்திரன் எழுதினார். இப்படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு, விவேக், டெல்லி கணேஷ், விசு, தாரிணி, காகா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் என் சக்சஸ் தெரியாதா, அம்மா அம்மா, அம்மம்மா தாங்காது, பக்கம் நிக்கும் நிலா, மாப்பிள்ளை ஒட்ட ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பக்கம் நிக்கும் நிலா பாடலை புஷ்பவனம் குப்புசாமி, அனுராதா ஸ்ரீராம், மனோ ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆனது. இப்படத்தின் இசை அமைப்பாளர் தினா.
சார்லி சாப்ளின்
2002ல் ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் சார்லி சாப்ளின். இப்படத்தை எம்.காஜா மைதீன் தயாரிக்க பரணி இசை அமைத்துள்ளார். பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், சின்னி ஜெயந்த், பாண்டு, பிரகாஷ்ராஜ், பிரமிட் நடராஜன், வையாபுரி, விவேக், விந்தியா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை 3 வெவ்வேறு நண்பர்களைப் பற்றியது. இப்படத்தில் அவ கண்ணப்பாத்தா, கண்ணாடி சேலை கட்டி, மாமு மாமு, முதலாம் சந்திப்பில், பொண்ணு ஒருத்தி சும்மா, ஷன்ஷா ஷால்பாஷா, வார்த்தை தவறி போனதனாலே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
சமுத்திரம்
2001ல் வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்க, ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். படத்தில் சரத்குமார், முரளி, மணிவண்ணன், கவுண்டமணி, மனோஜ், ஆகாஷ், அபிராமி, சிந்துமேனன், தியாகு, மோனல், சார்லி, மனோபாலா, ரியாஸ்கான், நடராஜன், செந்தில், வாசுவிக்ரம், காவேரி, மஞ்சுளா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டது. பைன் ஆப்பிள் வண்ணத்தோடு, காவிட்டா, காவிட்டா, விதியா விதியா, அழகான சின்ன தேவதை, கண்டுபிடி கண்டுபிடி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வானவில்

2000ல் மனோஜ் குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அர்ஜூன், அபிராமி, பிரகாஷ்ராஜ், மணிவண்ணன், லட்சுமி, தேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அத்தனையும் தேன் ரகங்கள். வெளி நாட்டுக் காற்று, ஓ….பெண்ணே…, ஆசை மகனே, பிறையே பிறையே, கன்னி கோயில், ஹோலி ஹோலி…பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றவை. படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்துப் பாராட்டினர்.
இன்று பிறந்தநாள் காணும் அபிராமிக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.





