AR Murugadoss: தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். முதல் படமே அஜித் வைத்து இயக்கியதோடு அந்த படம் ஹிட்டும் அடித்தது. அது ஒரு கமர்சியல் படம் என்றாலும் அடுத்து விஜயகாந்த் வைத்து இயக்கிய ரமணா முருகதாஸ் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை ரசிகர்களுக்கு காட்டியது. முருகதாஸ் படங்களில் ஆக்சன் இருந்தாலும் ஒரு சமூக பிரச்சனையை எடுத்து எல்லா படங்களிலும் பேசுவார். அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல்கள் பற்றி ரமணா படத்தில் பேசி இருந்தார்.
விஜயை வைத்து இவர் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தீவிரவாதத்தையும், அவர்களுக்கு உதவும் ஸ்லீப்பர் செல்கள் பற்றியும் பேசியது. இந்த படம் விஜயின் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.
மேலும் விஜயை வைத்து கத்தி, சர்க்கார் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். கத்தி படத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனையும், சர்கார் படத்தில் ஓட்டு போடுவது பற்றிய விழிப்புணர்வையும் பேசினார் முருகதாஸ்.
அதன்பின் அவர் இயக்கிய தர்பார் உள்ளிட சில படங்கள் ஓடவில்லை. 4 வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கினார். அந்த படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் கமலின் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்தது பற்றி பேசி இருக்கிறார்.
ஹிந்தியில் வெளியான முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தைதான் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எடுத்தார்கள். அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் எனக்குதான் வந்தது. முன்னா பாய் படத்தை பார்த்துவிட்டு இரண்டு விஷயங்களை முடிவு செய்தேன். ஒன்று இந்த படத்தில் கமல் மெட்ராஸ் தமிழில் பேசக்கூடாது. ஏனெனில் அதை அவர் பலமுறை செய்து விட்டார். இரண்டாவது இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதக் கூடாது என நினைத்தேன்.
ஏனெனில் இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்தது. கிரேஸி மோகன் எழுதும் காமெடி வசனங்களால் அந்த உணர்வுபூர்வமான காட்சிகளின் முக்கியத்துவம் அடிபட்டு போய்விடும் என நினைத்தேன். எனவே அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு என்னை விட்டுப் போனது. நான் எந்த ரெண்டு விஷயமும் அந்த படத்தில் இருக்கக் கூடாது என நினைத்தேனோ அதோடுதான் அந்த படம் வெளியானது’ என பேசி இருக்கிறார்.
